இந்திய அணி,  கவாஸ்கர்
இந்திய அணி, கவாஸ்கர் ட்விட்டர்
கிரிக்கெட்

“இந்திய அணி மணப்பெண் தோழியாகவே இருக்கிறது..” - தேர்வுக்குழுவை விமர்சித்த கவாஸ்கர்

Prakash J

வெஸ்ட் இண்டீஸுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, அங்கு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 1- 0 என கைப்பற்றியது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கில் கலக்கி இருந்தனர். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

பிசிசிஐ

இதுகுறித்து அவர், “இந்த தொடரில் தேர்வுக் குழுவினர் கற்றுக் கொண்டது என்ன? இதில் சீனியர்களுக்கு ஓய்வுகொடுத்துவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துப் பார்த்திருக்கலாம். இல்லையென்றால் இளம்வீரர்களால் நட்சத்திர வீரர்களுக்கு எந்த நெருக்கடியும் வரக்கூடாது என தேர்வுக்குழுவினர் பார்த்துக் கொள்கிறார்களா? அஜித் அகார்கர் தற்போது தேர்வுக் குழுத் தலைவராக வந்திருக்கிறார். அவருடைய செயல்பாடு இனி எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அவர், எதிர்காலத்திற்குத் தேவையான அணியை தேர்வு செய்வாரா? இல்லை பழைய கதையே தொடருமா என்று பார்க்க வேண்டும். இந்திய அணி மணப்பெண் தோழியாகவே இருக்கிறதே தவிர, மணப்பெண்ணாக இன்னும் மாறவில்லை.

விராட் கோலி முதல் டெஸ்டில் தவறவிட்ட சதத்தை இரண்டாவது டெஸ்டில் பூர்த்தி செய்தார். இது அவருடைய திறமையை மட்டும் காட்டவில்லை. எதிரணியின் பந்துவீச்சு, ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றை எல்லாம் யோசித்துத்தான் அவர் செயல்படுகிறார். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் நான்கு அபாயங்கள் இருக்கும். ஒன்று, தங்களது இன்னிங்ஸ் தொடங்கும்போது வரும். இரண்டாவது, அரைசதம் அடித்த பிறகு வரும். ஏனென்றால் அப்போது அவர்களுடைய கவனம் சிதைந்து இருக்கும்.

Virat Kohli

மூன்றாவது, 90 ரன்களில் இருக்கும்போது சதம் அடிக்க வேண்டும் என நெருக்கடி ஏற்படும். நான்காவது, ’சதம்தான் அடித்து விட்டோமே, இனி என்ன’ என்று யோசனை வரும். இவற்றை எல்லாம் தாண்டி விளையாடுவதுதான் சிறந்த பேட்ஸ்மேனுக்கு அழகு” எனத் தெரிவித்துள்ளார்.