steve smith
steve smith X
கிரிக்கெட்

'No.8 to Opener' ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய ஓப்பனர் ஸ்டீவ் ஸ்மித்! பலன் கொடுக்குமா புதிய முடிவு

Viyan

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஓப்பனிங் ஸ்லாட் என்பது கடந்த சில ஆண்டுகளாக தலைவலி கொடுக்கும் ஒரு விஷயமாகவே இருந்திருக்கிறது. மேத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லேங்கர் ஆகியோரின் ஓய்வுக்குப் பிறகு ஒரு நிரந்தரமான தொடக்க ஜோடி அவர்களுக்கு அமையவில்லை. டேவிட் வார்னர் ஒரு இடத்தை தனதாக்கினாலும் கிறிஸ் ரோஜர்ஸ், உஸ்மான் கவாஜா, கேமரூன் பேங்க்ராஃப்ட், மேட் ரென்ஷா, ஹேரிஸ் என வீரர்கள் மாறிக்கொண்டே இருந்தனர். கடந்த 2-3 ஆண்டுகளாகத்தான் கவாஜாவின் எழுச்சி அவர்களுக்கு ஒரு நிலையான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வாரம் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரோடு டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் கவாஜாவின் ஓப்பனிங் பார்ட்னரை உறுதி செய்வது அவசியம் ஆனது.

இந்த இடத்தில் பல குழப்பங்கள் நிலவியது. ஒருசில இளம் வீரர்கள் ஆஸ்திரேலியாவின் முதல் தர தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் ஓரளவு நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் தனித்துத் தெரியும் அளவுக்கு அவர்களின் எண்கள் இல்லை. அதனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் கேமரூன் பேங்க்ராஃப்ட் தொடக்க வீரராக களமிறக்கப்படவேண்டும் என்றார். மேத்யூ ஹெய்டனோ மேட் ரென்ஷாவின் பெயரை முன்மொழிந்தார். சைமன் கேடிச் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கேமரூன் கிரீனை ஓப்பனராகக் களமிறக்கவேண்டும் என்றார். மிட்செல் மார்ஷின் சமீபத்திய எழுச்சியின் காரணமாகவும், அவரது ஃபிட்னஸ் பிரச்சனைகள் காரணமாகவும் கிரீன் ஒருசில போட்டிகளில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெறாமல் போனார். அதனால் அவரை ஓப்பனராக களமிறக்கவேண்டும் என்றார் கேடிச். பாகிஸ்தான் தொடரின்போது பத்திரிகையாளர் வார்னரிடமே இதுபற்றிக் கேட்டனர். அதற்கு அவரோ, "என்னுடைய இடத்தில் ஹேரிஸ் ஆடினால் நன்றாக இருக்கும்" என்றார்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை வெளியிட்டுக்கொண்டிருக்க, "நான் ஓப்பனராக விளையாட ஆர்வமாக இருக்கிறேன்" என்று என்ட்ரி கொடுத்தார் ஸ்டீவ் ஸ்மித். இந்தத் தலைமுறையின் மிகச் சிறந்த டெஸ்ட் வீரராகக் கருதப்படும் ஸ்மித் மிடில் ஆர்டரில் இருக்கும்போது அது அந்த அணிக்குப் பன்மடங்கு பலம் சேர்க்கும். அவர் திடீரென ஓப்பனராக விளையாட விருப்பம் தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஸ்மித் போன்ற மிகச் சிறந்த டெஸ்ட் வீரர் யாரும் இல்லை என்பதால், அவர் ஆஸ்திரேலிய அணிக்கு மிகச் சிறந்த தொடக்கம் கொடுப்பார் என்று பலரும் அந்த அறிவிப்பை வரவேற்றனர்.

Steve Smith

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 17ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடருக்கான அணியை ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் அறிவித்தனர். அதில் ஸ்டீவ் ஸ்மித் ஓப்பனராகக் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் பயணத்தில் புதிய பயணமாக இருந்தாலும் இது எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கும் என்பது சந்தேகம் தான்.

தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித்! சரியான முடிவா?

ஸ்டீவ் ஸ்மித் மிகச் சிறந்த டெஸ்ட் வீரர். எந்தவொரு சூழ்நிலையில் இருந்தும் அணியை மீட்டெடுக்கக் கூடியவர். அப்படியொரு வீரர் மிடில் ஆர்டரில் ஆடுவது தான் அவருடைய முழு திறனையும் வெளிக்கொண்டுவரும். அதுதான் அணிக்கும் நல்லதொரு முடிவாக இருக்கும். உதாரணமாக ஆஸ்திரேலிய அணியின் சமீபத்திய ஒருநாள் உலகக் கோப்பைக்கான முடிவுகள் பற்றி சொல்லலாம். முதலில் அவர்கள் அறிவித்த ஸ்குவாடில் மார்னஷ் லாபுஷான் இடம்பெறவில்லை. அதன்பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர்கள் மிடில் ஆர்டர் சரிந்ததும், லாபுஷான் சிறப்பாக ஆடியதும் அவர்கள் கண்களைத் திறந்தது.

steve smith

முழுவதும் அட்டாக் செய்யும் மிடில் ஆர்டர் எப்போதும் ஆபத்தானது என்பதை உணர்ந்த ஆஸ்திரேலியா, ஸ்மித்தோடு லாபுஷானும் இருப்பது நல்லது என அவரை அதன்பிறகு உலகக் கோப்பை ஸ்குவாடில் சேர்த்தனர். எதிர்பார்த்ததைப் போலவே இறுதிப் போட்டியில் அணியின் சரிவை தடுத்து ஹெட்டுக்கு உறுதுணையாக இருந்தது லாபுஷான் தான்!

Smith

ஒருநாள் போட்டிக்கே இப்படியெனில் டெஸ்ட் போட்டிக்கு?! டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் போன்றவர்கள் தங்கள் வழக்கமான பாணியில் ஆடக்கூடியவர்கள். அப்படியிருக்கும்போது ஸ்மித் போன்ற ஒரு வீரர் நம்பர் 4 ஸ்லாட்டில் ஆடுவது மிகவும் முக்கியம். அதைத்தான் கேப்டன் கம்மின்ஸும் கூட விரும்பியிருக்கிறார். ஆனால் ஆஸ்திரேலிய அணி இப்போது அதிலிருந்து நகர்ந்திருக்கிறது. ஒருவேளை தடுமாறிக்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இது பிரச்னையாக வெடிக்காமல் இருக்கலாம். ஆனால் பெரிய அணிகளுக்கு எதிராக இது நிச்சயம் விரிசல்களை பெரிதாக்கும்.