மகாராஷ்டிரா அரசு, உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி மந்தனா, ராதா யாதவ் ஆகியோருக்கு தலா 2.25 கோடி ரூபாய் பரிசாக அறிவித்தது. இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்த இவர்களை நேரில் அழைத்து கௌரவித்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், அவர்களின் சாதனையை பாராட்டினார்.
1978 முதல் உலகக்கோப்பையில் பங்கேற்றுவந்த இந்திய மகளிர் அணி 47 ஆண்டுகளாக ஒரு உலகக்கோப்பை கூட வெல்லமுடியாமல் தோல்வி முகத்துடன் திரும்பியது..
இந்தசூழலில் சொந்த மண்ணில் நடைபெற்ற 2025 மகளிர் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிப்போட்டியில் 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை தோற்கடித்த ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்தியா, இறுதிப்போட்டியில் லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்கா மகளிர் அணியை எதிர்கொண்டு விளையாடியது..
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஷபாலி வெர்மாவின் 87 ரன்கள் ஆட்டத்தால் 50 ஓவரில் 298 ரன்கள் குவித்தது.. 299 ரன்களை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.. முதல்முறையாக உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி வரலாற்றில் தடம் பதித்தது..
உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசுத்தொகையாக 51 கோடி ரூபாயை பிசிசிஐ அறிவித்து கௌரவித்தது.. இந்த சூழலில் உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருந்த ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் அவர்களின் மாநில அரசு பரிசுத்தொகையை அறிவித்து வருகிறது..
அதன்படி தொடர் நாயகி விருது வென்ற வீராங்கனை தீப்தி சர்மாவிற்கு 3 கோடி ரூபாயை அறிவித்தது உத்தரபிரதேச அரசு.. அதேபோல 22 வயது வீராங்கனை கிராந்தி கவுட்டுக்கு 1 கோடி ரூபாயை பரிசுத்தொகையாக அறிவித்து கௌரவித்தது மத்திய பிரதேச அரசு..
இந்தவரிசையில் மகாராஷ்டிரா வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி மந்தனா, ராதா யாதவ் முதலிய 3 வீரர்களுக்கும் தலா 2.25 கோடி ரூபாயை பரிசாக அறிவித்தது மகராஷ்டிரா அரசு.. மூன்று வீராங்கனைகளையும் நேரில் அழைத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ரூபாய் 2.25 கோடிக்கான காசோலையை வழங்கி கௌரவித்தார்.. அதேபோல தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தாருக்கு ரூபாய் 22.5 லட்சம் ரூபாயை பரிசாக அறிவித்துள்ளார்..
ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 127 ரன்கள் அடித்தார், அதேபோல தொடரில் 434 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா அசத்தினார்.. ஃபீல்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டார் ராதா யாதவ்..
தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசிய ஸ்ரீ சரணிக்கு ரூபாய் 2.5 கோடியும், அவருடைய சொந்த மண்ணில் ஒரு வீடு மற்றும் அரசு வேலையும் வழங்கி கௌரவித்துள்ளது ஆந்திர பிரதேச அரசு..