2025 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கர்ட்லி ஆம்ரோஸ், வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடிக்க, ஸ்டார்க் பெர்த் டெஸ்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் முதல் ஆஷஸ் இடதுகை வேகப்பந்துவீச்சளராக வரலாற்று சாதனையை படைப்பார்..
கிரிக்கெட் வரலாற்றில் பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடரான ஆஷஸ், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியா மண்ணில் நடக்கவிருக்கிறது..
ஆஸ்திரேலியா சென்றுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, நவம்பர் 21 முதல் ஜனவரி 08-ம் தேதிவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. பெர்த் மைதானத்தில் நாளை தொடங்கும் முதல் போட்டியில் பாட் கம்மின்ஸுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவை வழிநடத்தவிருக்கிறார்..
முதுகுப்பகுதியில் வலி காரணமாக முதல் போட்டியை தவறவிடும் கம்மின்ஸ், இரண்டாவது போட்டிக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இருக்கிறது.. மேலும் ஹசல்வுட்டும் காயம் காரணமாக முதல் டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார்..
ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கியமான பவுலர்கள் இல்லாத சூழலில், ஸ்காட் போலண்ட், அறிமுக பவுலர் பிரெண்டன் டகெட் மற்றும் காம்ரூன் க்ரீன் உடன் பவுலிங் யூனிட்டை தனியாளாக வழிநடத்தவிருக்கிறார் மிட்செல் ஸ்டார்க்..
பெர்த்தில் நடக்கவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் முதல் ஆஸ்திரேலியா பவுலராக சாதனையை படைக்கவிருக்கும் மிட்செல் ஸ்டார்க், இந்த ஆஷஸ் தொடரில் கர்ட்லி ஆம்ரோஸ், வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்களின் பல்வேறு சாதனைகளை முறியடிக்க உள்ளார்..
ஆஷஸில் முதல் பவுலர் - ஆஷஸ் டெஸ்ட் வரலாற்றில் இன்னும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினால், 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார்.. மேலும் ஆஷஸில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தும் 21வது பவுலராகவும், 13வது ஆஸ்திரேலியா பவுலராகவும் பெருமை பெருவார்..
ஆம்ப்ரோஸ் - பெர்த் டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளை ஸ்டார்க் வீழ்த்தினால், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரோஸை பின்னுக்கு தள்ளுவார். 100 டெஸ்ட் போட்டிகளில் 402 விக்கெட்டுகளை ஸ்டார்க் வீழ்த்தியிருக்கும் நிலையில், ஆம்ப்ரோஸ் 98 டெஸ்ட் போட்டிகளில் 405 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
வாசிம் அக்ரம் - டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இடதுகை வேகப்பந்துவீச்சாளராக 414 விக்கெட்டுகளுடன் வாசிம் அக்ரம் முதலிடத்தில் உள்ளார்.. அவரை முறியடிக்க இன்னும் ஸ்டார்க்கிற்கு 13 விக்கெட்டுகள் தேவையாக உள்ளது..
ஆஷஸ் டெஸ்ட் தொடர்களில் 22 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஸ்டார்க் 27.37 சராசரி மற்றும் நான்கு முறை ஐந்து விக்கெட்டுகள் உடன் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.