#BANvSL
#BANvSL Twitter
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பை தக்கவைக்குமா இலங்கை? இன்று வங்கதேசத்துடன் மோதல்!

Viyan
போட்டி 38: வங்கதேசம் vs இலங்கை
மைதானம்: ஃபெரோஷ் ஷா கோட்லா, டெல்லி
போட்டி தொடங்கும் நேரம்: நவம்பர் 6, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை வங்கதேசம்:

போட்டிகள் - 7, வெற்றி - 1, தோல்விகள் - 6, புள்ளிகள் - 2

புள்ளிப் பட்டியலில் இடம்: ஒன்பதாவது இடம்

சிறந்த பேட்ஸ்மேன்: மஹமதுல்லா - 274 ரன்கள்

சிறந்த பௌலர்: மெஹதி ஹசன் மிராஜ் - 9 விக்கெட்டுகள்

bangladesh

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி பாசிடிவாக உலகக் கோப்பையைத் தொடங்கிய வங்கதேசம், அதன்பிறகு தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோற்றிருக்கிறது. தோல்விகள் ஒருபக்கம் இருந்தாலும், அவை எதுவுமே சிறியது இல்லை என்பது தான் கவலை தரும் விஷயம். சேஸ் செய்த போட்டிகளில் குறைந்தபட்சம் 80 ரன்களிலாவது தோற்றிருக்கிறார்கள். முதலில் பேட் செய்த போட்டிகளில் 3 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தவே இல்லை. அவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது வங்கதேசத்தின் செயல்பாடு. இங்கிலாந்து அணி இவர்களை விட மோசமான ரன் ரேட் வைத்திருக்கும் ஒரே காரணத்தாலேயே கடைசி இடத்தை தவிர்த்திருக்கிறது அந்த அணி.

2023 உலகக் கோப்பையில் இதுவரை இலங்கை:

போட்டிகள் - 7, வெற்றிகள் - 2, தோல்விகள் - 5, புள்ளிகள் - 4

புள்ளிப் பட்டியலில் இடம்: ஏழாவது இடம்

சிறந்த பேட்ஸ்மேன்: சதீரா சமரவிக்ரமா - 331 ரன்கள்

சிறந்த பௌலர்: தில்ஷன் மதுஷன்கா - 18 விக்கெட்டுகள்

srilanka

ஹாட்ரிக் தோல்வியோடு உலகக் கோப்பையைத் தொடங்கியவர்கள், அதன்பிறகு அடுத்தடுத்து 2 போட்டிகளில் வென்றனர். கம்பேக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்க, ஆப்கானிஸ்தானிடம் அடிவாங்கி அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறினர். முந்தைய போட்டியிலோ இந்தியாவுக்கு எதிராக வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 302 ரன்களில் படுதோல்வி அடைந்தது இலங்கை.

மைதானம் எப்படி இருக்கும்?

ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் இதுவரை 4 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. அதில் 3 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றிருக்கிறது. இந்தியா மட்டுமே சேஸ் செய்து வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரை பேட்டிங்குக்கு சாதகமாக இந்த மைதான ஆடுகளங்கள் இருந்திருக்கின்றன. இலங்கை அணி இந்த உலகக் கோப்பையில் தங்கள் முதல் போட்டியை இந்த மைதானத்தில் தான் ஆடியது. அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 428 ரன்கள் குவித்தது. ஏற்கெனவே மைதானம் பற்றிய புரிதல் இருப்பது நிச்சயம் இலங்கைக்கு சாதகமான அம்சமாக இருக்கும்.

srilanka

சாம்பியன்ஸ் டிராஃபி இடம் யாருக்கு?

இந்த இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டதால், இந்தப் போட்டி முக்கியத்துவம் இழந்துவிட்டது என்று சொல்லிட முடியாது.

ஏனெனில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இடத்துக்கு இன்னும் போட்டி நீடிக்கிறது. இந்த உலகக் கோப்பையில் டாப் 8 இடங்கள் பிடிக்கும் அணிகள் தான் அந்தத் தொடருக்குத் தகுதி பெறும். ஏற்கெனவே 6 அணிகள் அதற்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் இன்னும் கோதாவில் இருக்கின்றன. இந்தப் போட்டியில் தோற்றுவிட்டால் வங்கதேசத்தின் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிடும். அதனால் அந்த அணி உத்வேகம் பெற்று ஆடியாகவேண்டும்.

இந்த மைதானத்தில் ஏற்கெனவே ஆடிய போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சில் சொதப்பியிருந்தாலும் பேட்டிங்கில் அசத்தியிருந்தது. குசல் மெண்டிஸ் பவர்பிளேவிலேயே 8 சிக்ஸர்கள் விளாசி மிரட்டினார். முதலிரு போட்டிகளில் அசத்தியவர், அதன்பிறகு காணாமல் போய்விட்டார். ஒருவேளை இந்த ஆடுகளம் அவர் மீண்டுமொரு பெரிய இன்னிங்ஸ் ஆட உதவலாம்.

bangladesh

பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே சொதப்பும் வங்கதேச அணி கடந்த 6 போட்டிகளில் ஒரு தருணத்தில் கூட எதிரணியை விட முன்னிலையில் இருக்கவில்லை. முதலில் பேட்டிங் செய்தாலும் சரி பந்துவீசினாலும் சரி அவர்களுக்கு நல்லதொரு தொடக்கம் அமையவேண்டும். இல்லாவிட்டால் அந்த அணி ஏழாவது தொடர் தோல்வியை சந்திக்க நேரிடும்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

வங்கதேசம் - ஷகிப் அல் ஹசன்: மிகவும் முக்கியமான இந்த போட்டியில் கேப்டன் ஷகிப் முன் நின்று அணியை வழிநடத்தவேண்டும். அவரிடம் இன்னும் ஒரு அட்டகாச செயல்பாடு வரவில்லை.

srilanka

இலங்கை - தில்ஷன் மதுஷன்கா: ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் விக்கெட் வேட்டை நடத்திக்கொண்டிருக்கும் மதுஷன்கா தடுமாறும் வங்கதேசத்துக்கு எதிராகவும் தன் வித்தையைக் காட்டுவார்.