17வது ஆசியக்கோப்பை தொடர் யுஏஇ-ல் உள்ள துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற்றுவருகிறது. பரபரப்பாக நடந்துமுடிந்த லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் முதலிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
துபாயில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய தசுன் ஷனகா 6 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உட்பட 64 ரன்கள் அடித்தார்.
169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து தடுமாற்றத்துடன் தொடங்கியது. ஆனால் கேப்டன் லிட்டன் தாஸ் உடன் கைக்கோர்த்த தொடக்கவீரர் சைஃப் ஹசன் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். சைஃப் ஹசன் 61 ரன்கள் அடித்து அசத்த, அடுத்துவந்த தவ்ஹித்தும் 37 பந்தில் 58 ரன்கள் அடித்து அசத்தினார்.
இறுதிஓவரில் 5 ரன்கள் அடிக்கவேண்டிய நிலையில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணி பயமுறுத்தியது. ஆனால் முடிவில் வங்கதேசம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது. 61 ரன்கள் அடித்த தொடக்க வீரர் சைஃப் ஹசன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.