kusal mendis reuters
கிரிக்கெட்

பதவியேற்றவுடன் கோரதாண்டவம்.. பாகிஸ்தானைக் கதறவிட்ட புதிய கேப்டன்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்த இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் புது சாதனை படைத்துள்ளார்.

Prakash J

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 434 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, 42 ஓவர்களில் 155 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணியை மீட்கும் முயற்சியில் கேப்டன் குசால் மெண்டிஸ் (119) சதமடித்து அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், கேப்டனாகத் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 37-வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை மெண்டிஸ் பெற்றார்.

kusal mendis

மேலும், பாகிஸ்தானுக்கு எதிராகத் தனது டெஸ்ட் கேப்டன்சி அறிமுகப் போட்டியில் சதம் அடித்த, இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸுக்குப் பிறகு இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இதேபோல் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், சுப்மன் கில், வையான் முல்டர், சுனில் கவாஸ்கர், கிரேக் சேப்பல், அலாஸ்டர் குக், கெவின் பீட்டர்சன் உள்ளிட்ட வீரர்களும் கேப்டன் பதவியேற்று சதமடித்த வீரர்களாவர். கடந்த மாதம், தனஞ்சயா டி சில்வாவுக்குப் பதிலாக இலங்கை டெஸ்ட் அணியின் முழுநேர கேப்டனாக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 13000 ரன்களைக் கடந்த 8வது இலங்கை வீரர் என்ற பெருமையையும் மெண்டிஸ் பெற்றார்.