brian lara
brian lara pt web
கிரிக்கெட்

நீக்கப்படும் SRH பயிற்சியாளர் பிரயன் லாரா; கடந்த சில ஆண்டுகளாக நடந்ததென்ன? புதிய பயிற்சியாளர் யார்?

Viyan

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரயன் லாரா. அவருக்குப் பதிலாக முன்னாள் நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி அந்த அணியின் புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தியன் பிரீமியர் லீக் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தங்கள் பயிற்சியாளர் பிரயன் லாராவை அப்பதவியில் இருந்து நீக்கியிருக்கிறது. 2023 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார் லாரா. 2023 மினி ஏலத்துக்கு முன்பாக பல வீரர்களைக் கழட்டிவிட்ட அந்த அணி, அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் ஏலத்தில் செயல்பட்டது. பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சாம் கரண் போன்ற ஆல் ரவுண்டர்களை வாங்குவார்கள் என்று எதிர்பார்த்திருக்க ஹேரி ப்ரூக் போன்ற ஒரு பேட்ஸ்மேனை 13.25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது அந்த அணி.

ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆகப்போகும் 'இம்பேக்ட் பிளேயர்' விதிக்கு ஏற்ப அந்த அணி வீரர்களை வாங்கியிருக்கிறது என்றும், அதைப் பயன்படுத்தி கோப்பை வெல்வதற்கு ஏற்ற அணியாக அது இருக்கிறது என்றும் பல வல்லுநர்கள் கருதினார்கள். ஆனால், களத்தில் நடந்ததோ வேறு. வழக்கம் போல.. சொல்லப்போனால் வழக்கத்தை விட மோசமாக செயல்பட்டது அந்த அணி. பெர்ஃபாமன்ஸ், அணித் தேர்வு என எல்லாமே மோசமாக இருந்தது. இறுதியில் 14 லீக் போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்று கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

lara

இந்த செயல்பாட்டைத் தொடர்ந்து இப்போது பிரயன் லாரா பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே பயிற்சியாளர்களை மாற்றுவது சன்ரைசர்ஸ் அணியின் வாடிக்கையாக மாறி வருகிறது. ஆரம்ப காலத்தில் சரியான திட்டங்களோடு நிலைத்தன்மையோடு செயல்பட்ட அந்த அணி, கடைசி 4 ஆண்டுகளில் 4 முறை பயிற்சியாளர்களை மாற்றியிருக்கிறது. பல கேப்டன்களும் மாறிவிட்டனர்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பயிற்சியாளர்கள் பட்டியல்

டாம் மூடி - 2013 முதல் 2019 வரை

டிரெவர் பெய்லிஸ் - 2020 & 2021

டாம் மூடி - 2022

பிரயன் லாரா - 2023

2013 முதல் 2019 வரை டாம் மூடி பயிற்சியாளராக இருந்த அந்த 7 சீசன்களில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதில் ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றது (2016). ஒரு முறை (2018) இரண்டாம் இடம் பிடித்தது. ஆனால் இந்த 4 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது. இரண்டு முறை கடைசி இடம் பிடித்திருக்கிறது.

லாராவுக்குப் பதில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் வெட்டோரிக்கும் ஐபிஎல் தொடரில் பயிற்சி அளித்த அனுபவம் இருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்தவர், 2014ம் ஆண்டு அந்த அணியின் பயிற்சியாளராக பதவியேற்றார். 2016ம் ஆண்டு அவர் தலைமையில் ஆர்சிபி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அப்போது சன்ரைசர்ஸிடம் தான் இறுதிப் போட்டியில் அந்த அணி தோல்வியடைந்தது. தற்போது இங்கிலாந்தில் நடந்துவரும் 'தி 100' தொடரில் பிர்மிங்ஹம் ஃபீனிக்ஸ் ஆண்கள் அணிக்குப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் வெட்டோரி, வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய தேசிய அணிகளோடு பணியாற்றியிருக்கிறார்.

daniel vettori

2023 ஐபிஎல் சீசனுக்குப் பிறகு இதுவரை 3 அணிகள் பயிற்சியாளர்களை மாற்றியுள்ளன. இதுவரை பங்கேற்ற 2 சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ஆண்டி ஃபிளவரை தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கரை அந்த இடத்தில் நியமித்தது. அந்த ஆண்டி ஃபிளவரை ஒப்பந்தம் செய்துவிட்டு, ஒப்பந்தம் முடிந்த தங்கள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரையும், டைரக்டர் ஆஃப் கிரிக்கெட் மைக் ஹெசனையும் கழட்டிவிட்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இப்போது அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் வெட்டோரி சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒரு அற்புதமான பயிற்சியாளர் மியூசிக்கல் சேர் நடந்துகொண்டிருக்கிறது.