Van der Merwe
Van der Merwe pt desk
கிரிக்கெட்

Worldcup Cricket: தாய் நாட்டுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த வீரர்- யார் இந்த வான் டெர் மெர்வே?

webteam

ரோலோஃப் வான்டெர் மெர்வே. 38 வயதிலும் துடிப்பான ஆல் ரவுண்டராகவும், நெதர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் ஜொலித்து வருகிறார். ஆனால், வான் டெர் மெர்வேவின் தாய்நாடு தென்னாப்பிரிக்கா. ஜோகன்னஸ் பர்க்கில் பிறந்த இவர், கடந்த 2004-ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்காக களமிறங்கினார்.

Van der Merwe

இடது கை சுழற்பந்து வீச்சு, வலது கை அதிரடி பேட்ஸ்மேன் ஆக அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 2009-ஆம் ஆண்டு டி-20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமான வான் டெர் மெர்வே, ஆட்டநாயகன் விருதையும் பெற்று அசத்தினார். தென்னாப்பிரிக்க அணிக்காக இருபது ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகள் என 26 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணியில் திறமையான வீரராக இருந்தபோதும், பல்வேறு காரணங்களால் 2015-ஆம் ஆண்டு நெதர்லாந்து குடியுரிமை பெற்று அந்நாட்டுக்கு குடிபெயர்ந்தார் வான்டெர் மெர்வே. கிரிக்கெட்டில் தடம்பதிக்க தடுமாறிக் கொண்டிருந்த நெதர்லாந்து அணிக்கு துருப்புசீட்டாக இவர் கிடைத்தார். அதே ஆண்டில் நெதர்லாந்து அணிக்காக விளையாடத் தொடங்கிய வான் டெர் மெர்வே, அணியில் மூத்த வீரராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் தம்மை வளர்த்துக்கொண்டார்.

கடந்தாண்டு இருபது ஓவர் உலகக் கோப்பையில் தனது தாய் நாடான தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில், டேவிட் மில்லர் அடித்த பந்தை அபாரமாக கேட்ச் பிடித்து நெதர்லாந்து வெற்றிக்கு உதவினார். அந்த தோல்வியோடு தென்னாப்பிரிக்கா அணியும் தொடரில் இருந்து நடையை கட்டியது.

அதன் தொடர்ச்சியாகதான் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா மீண்டும் மண்ணைகவ்வ முக்கிய துருப்புச் சீட்டாக இருந்துள்ளார் வான் டெர் மெர்வே. 19 பந்துகளில் 29 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ரன்ரேட் உயர உதவினார். பந்து வீச்சிலும் 9 ஓவர்கள் வீசி 34 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்ததோடு, கேப்டன் பவுமா, வான்டெர் டுஸைன் விக்கெட்களை வீழ்த்தி தாய் நாட்டுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.