மீண்டும் திரும்பிய Bowl-Out முறை x
கிரிக்கெட்

2007 டி20 WC-ல் பார்த்தது.. மீண்டும் திரும்பிய Bowl-Out முறை! தென்னாப்ரிக்கா த்ரில் வெற்றி!

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடும் லெஜெண்ட்களுக்கான உலக சாம்பியன்ஷிப் டி20 லீக் போட்டியில் Bowl-Out முறை மீண்டும் பயன்படுத்தப்பட்டது ரசிகர்களை 2007 டி20 உலகக்கோப்பைக்கே அழைத்துச்சென்றது.

Rishan Vengai

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரின் இரண்டாவது சீசனானது கடந்த ஜுலை 18-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் இந்தியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் முதலிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

நடப்பு தொடரில் ஏபிடி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங், பிரட் லீ, இயன் மோர்கன், ஷாஹித் அப்ரிடி முதலிய நட்சத்திர முன்னாள் வீரர்கள் பங்கேற்றுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதல் போட்டியில் இங்கிலாந்து சாம்பியன்ஸை 5 ரன்னில் வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்ஸ் த்ரில் வெற்றிபெற்றது. இந்த சூழலில் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸுக்கும், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸுக்கும் இடையேயான போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது.

Bowl-Out மூலம் முடிவை எட்டிய போட்டி..

தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. 11 ஓவர்கள் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 79/5 என இருந்தபோது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

பின்னர் DLS முறைப்படி தென்னாப்பிரிக்காவிற்கு வெற்றி இலக்காக 81 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவதாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 11 ஓவர் முடிவில் 80 ரன்கள் அடிக்க போட்டி சமனானது.

இந்நிலையில் போட்டியின் முடிவை எட்ட சூப்பர் ஓவருக்கு பதிலாக பவுல்-அவுட் முறை நடத்தப்பட்டது. ஒவ்வொரு அணிக்கும் 5 வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், முதலில் பந்துவீசிய தென்னாப்பிரிக்கா பவுலர்கள் 3 வாய்ப்புகளை தவறவிட்ட பிறகு கடைசி 2 வாய்ப்புகளில் ஸ்டம்பை தாக்கினர்.

அதனைத்தொடர்ந்து பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், வேகப்பந்துவீச்சாளர்கள் எட்வர்ட்ஸ் மற்றும் காட்ரல் இருவரும் சிறிய இடைவெளியில் ஸ்டம்பை தாக்குவதை தவறவிட்டனர். அதற்குபிறகு பந்துவீசிய ஆஷ்லே நர்ஸ் ஸ்டம்பை தாக்குவதில் கோட்டைவிட்டார். கடைசி 2 வாய்ப்புகளிலும் ஸ்டம்பை அடிக்கவேண்டிய சூழலில் டிவைன் பிராவோவிடம் பந்து கொடுக்கப்பட்டது. ஆனால் அவரும் தவறவிட தென்னாப்பிரிக்கா அணி வெற்றியை ருசித்தது.

பல வருடங்களுக்கு பிறகு கிரிக்கெட் களத்தில் பவுல்-அவுட் முறை பரிசோதிக்கப்பட்டதை பார்த்த ரசிகர்கள், 2007 டி20 உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்த்தது நினைவுக்கு வருவதாக கருத்திட்டு வருகின்றனர்.