ஐசிசி மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிரோபி ஒருநாள் தொடரானது பிப்ரவரி 19 முதல் தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது.
முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்தும், இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியாவும் வெற்றியை பதிவுசெய்துள்ளன.
இந்த நிலையில் கராச்சியில் நடக்கும் மூன்றாவது போட்டியில் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடிவருகிறது.
கராச்சியில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. தொடக்க வீரராக களமிறங்கிய ரியான் ரிக்கல்டன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 பவுண்டரிகள் 1 சிக்சர் உதவியுடன் முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார்.
ரிக்கல்டன் 103 ரன்கள் அடித்து அசத்த, அடுத்தடுத்து சிறப்பாக விளையாடிய கேப்டன் டெம்பா பவுமா (58), டஸ்ஸன் (52), மார்க்ரம் (52) என மூன்றுபேரும் அரைசதங்கள் அடிக்க 50 ஓவர் முடிவில் 315 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்கா அணி. ஆப்கானிஸ்தான் அணியில் நபி மட்டுமே சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
316 ரன்கள் என்ற அதிகபட்ச ரன் சேஸிங்கை நோக்கி விளையாடவிருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை 306 ரன்கள் மட்டுமே அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்ட இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.