david miller
david miller icc
கிரிக்கெட்

மீண்டும் திரும்பிய 1999 செமிபைனல்! அதே 213 ரன்கள்! ஆஸியை பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா?

Rishan Vengai

நடப்பு 2023 ஒருநாள் உலகக்கோப்பையானது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஈடன் கார்டனில் முந்தைய நாள் மழை பெய்திருந்ததால் முதல் இன்னிங்ஸில் பந்து ஸ்விங் ஆகும் என தெரிந்தும், தங்களுடைய பலம் முதல் பேட்டிங் என்பதால் பேட்டிங்கை எடுத்து ஆடியது தென்னாப்பிரிக்கா அணி.

24 ரன்களுக்கே 4 விக்கெட்டை இழந்து தடுமாறிய தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா அணி ஸ்விங்கிங் கண்டிசனை எதிர்கொள்ள தயாரானாலும், மைதானத்தின் தன்மையை சரியாக பற்றிக்கொண்ட ஆஸ்திரேலியா பவுலர்கள் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். கேப்டன் டெம்பா பவுமாவை முதல் ஓவரிலேயே டக் அவுட்டில் வெளியேற்றி அசத்தினார் மிட்செல் ஸ்டார்க்.

பின்னர் விக்கெட்டை விட்டுக்கொடுக்க கூடாது என நிதானம் காட்டிய டிகாக்கிற்கு எதிராக ஒரு பக்கா பிளான் செய்த ஆஸ்திரேலிய அணி, உள்ளே வெளியே என பந்துவீசி டிகாக் மீது அழுத்தம் போட்டு 3 ரன்னில் வெளியேற்றி கலக்கிப்போட்டது. 8 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாற, அடுத்து கைக்கோர்த்த மார்க்ரம் மற்றும் டஸ்ஸென் இருவரும் அடுத்த 5 ஓவர்கள் வரை தாக்குபிடித்தனர்.

Klaasen

31 பந்துகள் சந்தித்து 6 ரன்களில் திடமாக நின்ற வான் டர் டஸ்ஸெனை ஹசல்வுட் வெளியேற்ற, பின்னர் பந்துவீச வந்த மிட்செல் ஸ்டார்க் மார்க்ரமை 10 ரன்னில் வெளியேற்றினார். ஹசல்வுட் மற்றும் ஸ்டார்க் இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு இரண்டு இரண்டு விக்கெட்டுகளாக தூக்க 24 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து நிலைகுலைந்தது தென்னாப்பிரிக்கா அணி.

தனியொரு ஆளாக போராடி சதமடித்த டேவிட் மில்லர்!

5வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த க்ளாசன் மற்றும் மில்லர் இருவரும் ஆஸ்திரேலியாவின் பலமான பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக போராடினர். முதலில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நிதானம் காட்டிய இந்த ஜோடி, ஆஸ்திரேலியாவின் ப்ரைம் ஸ்பின்னரான ஆடம் ஷாம்பாவை அட்டாக் செய்தது. அடுத்தடுத்து சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்ட இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நெருங்கியது. இந்த ஜோடியை பிரிக்க நினைத்த ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்தை டிராவிஸ் ஹெட் கையில் கொடுத்தார்.

david miller

ஒரு கேம் சேன்ஜிங் பவுலிங்கை வீசிய டிராவிஸ் ஹெட், க்ளாசனை 47 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றியது மட்டுமில்லாமல், அடுத்துவந்து மார்கோ யான்சனை டக் அவுட்டில் வெளியேற்றி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்துவந்து கலக்கி போட்டார்.

பின்னர் களமிறங்கிய கோட்ஸியுடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் அடுத்த பார்ட்னர்ஷிப்பை எடுத்துவந்தார். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கழற்றிய ஆஸ்திரேலியா அணி அழுத்தம் போட, மறுமுனையில் தனியொரு ஆளாக அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 8 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என பறக்கவிட்டு சதமடித்து அசத்தினார். மில்லர் 101 ரன்னில் வெளியேற அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா அணி 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. 213 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு விளையாடிவருகிறது ஆஸ்திரேலியா அணி.

மீண்டும் திரும்பிய 1999 அரையிறுதி! அன்று என்ன நடந்தது?

1999 ஒருநாள் உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 213 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 214 ரன்கள் அடித்தால் இறுதிப்போட்டிக்கு செல்லலாம் என்ற பெரும் கனவோடு களமிறங்கியது தென்னாப்பிரிக்கா அணி.

1999 Semi Final

இரண்டாவது பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணியில், இன்றைய போட்டியை போலவே டாப் ஆர்டர் வீரர்கள் 4 பேரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். 61 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறிய தென்னாப்பிரிக்கா அணியை, அதற்கு பிறகு கைக்கோர்த்த ஜாக் காலிஸ் மற்றும் ஜாண்டி ரோட்ஸ் இருவரும் சேர்ந்து சரிவிலிருந்து மீட்கப்போராடினர். காலிஸ் 53 ரன்னிலும், ரோட்ஸ் 43 ரன்னிலும் வெளியேற கடைசியாக களத்தில் போராடிய இடது கை பேட்டர் க்ளுசெனர் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு வெற்றிக்கு அருகில் தென்னாப்பிரிக்காவை எடுத்துச்சென்றார்.

1999 Semi Final

48.4 ஓவரில் 198 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா இழந்தாலும் தற்போதைய டேவிட் மில்லரை போல் அதிரடி காட்டிய இடது கை வீரர் க்ளூசெனர் பவுண்டரிகளை விரட்டி ரன்களை எடுத்துவந்தார். கடைசி 6 பந்துகளுக்கு வெற்றிபெற தென்னாப்பிரிக்காவுக்கு 9 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு 1 விக்கெட்டும் தேவையாக இருந்தது. அப்போது முதலிரண்டு பந்தையும் க்ளூசெனர் பவுண்டரிகளாக விரட்டி 8 ரன்கள் எடுக்க ஆட்டம் சமனிலைக்கு வந்தது. ஆனால்

ஒரு பரபரப்பான கட்டத்தில் ஒரு ரன்னை எடுத்துவர சிங்கிளுக்கு தட்டிவிட்டு க்ளூசெனர் ஓடிவர, நான்-ஸ்டிரைக்கில் இருந்த ஆலன் டொனால்ட் பந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு க்றீஸிலையே நின்றுவிட்டார். முக்கியமான தருணத்தில் ஆஸ்திரேலியா ரன் அவுட் செய்து தென்னாப்பிரிக்காவை ஆல் அவுட் செய்ய, புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்காவை விட நல்ல ரன்ரேட்டுடன் இருந்த ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு சென்றது.

1999 Semi Final

இந்நிலையில் தற்போதும் அதே 213 ரன்களை இவ்விரு அணிகளும் வெற்றிக்காக வைத்திருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 1999 உலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்கு பழிதீர்க்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.