1976ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது.. தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து செய்திதாள்களின் தலைப்புகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியை புகழ்ந்து எழுதப்பட்டது, அப்போதைய இங்கிலாந்து கேப்டன் டோனி கிரெய்க்கை கோபமடையச் செய்தது..
அப்போது முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளருக்கு பேட்டியளித்த டோனி கிரெய்க், வெஸ்ட் இண்டீஸை இழிவாக பேசும்வகையில் ‘குரோவல் (Grovel)’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு அதே குரோவல் என்ற வார்த்தையை இந்தியாவிற்கு எதிராக தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் பேசியுள்ளார்..
அப்போது பேசிய டோனி கிரெய்க், அவர்கள் (வெஸ்ட் இண்டீஸ்) ஒன்றும் அவ்வளவு திறமையான வீரர்களாக எனக்கு தெரியவில்லை என்றும், அவர்களை காலடியில் மண்டியிட செய்ய விரும்புவதாகவும் பேசியதாக அப்போதைய செய்திகள் குறிப்பிட்டன.. குரோவல் என்ற வார்த்தையை பயன்படுத்திய டோனி கிரெய்க் ஒரு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்பதால், அவரின் கருத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் மீதான ஒரு இனவெறி தாக்குதலாக பார்க்கப்பட்டது.. அது ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்களையும் கோபமடையச்செய்தது..
அப்போதைய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாயிட் கிரெய்க்கின் வார்த்தைகள் எங்களை மிகவும் பாதிக்கப்பட வைத்ததாகவும், அதற்கு பதிலடி கொடுக்க நினைத்ததாகவும் தெரிவித்தார்.. அந்த தொடரில் 3-0 என வெற்றிபெற்று வெஸ்ட் இண்டீஸ் அணி பதிலடி கொடுத்தது, இங்கிலாந்து பேட்டர்களின் ஸ்டம்புகளை காற்றில் பறக்கவிட்ட விண்டீஸின் வேகப்பந்துவீச்சு அடுத்த கட்டத்திற்கு சென்றது.. பேட்டிங்கில் மிரட்டிய விவ் ரிச்சர்ட்ஸ் 2 இரட்டைசதங்கள், ஒரு சதமென அடித்து மிரட்டியிருந்தார்..
அந்த தொடர் முழுவதும் 15 போட்டிகள் வரை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவியது.. தொடரின் முடிவுக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் கிரெய்க் தன்னுடைய கருத்திற்காக மன்னிப்பு கேட்டார்..
இந்தசூழலில் இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 500 ரன்களுக்கு மேல் குவித்து வலுவான நிலையில் இருந்தபோதும், தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் ’குரோவல்’ என்ற வார்த்தையை பேசியிருப்பது 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே சர்ச்சையை மீண்டும் கொண்டுவந்துள்ளது.. ஆனால் இங்கே தாம் இனவெறி அல்லது இழிவான பொருளை வைத்து இந்தியாவை சொல்லவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடைசி நாள் ஆட்டத்திற்கு முன்பு பேசிய தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட், ”நாங்கள் அதிகநேரம் இந்திய வீரர்களை களத்தில் திணறடிக்க விரும்பினோம்.. உண்மையில் அவர்களை தவழவைக்க (Grovel) நினைத்தோம்.. 500 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்து முடிந்தால் இறுதிநாளில் அடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லவிரும்பினோம்” என பேசியுள்ளார்.. அவரின் இந்த பேச்சு விவாதத்தை கிளப்பியுள்ளது..
சுக்ரி கோன்ராட் பேசிய வார்த்தையை கண்டித்து பேசிய அனில் கும்ப்ளே, ‘வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பேசியபோது தொடர் எப்படி முடிந்தது என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால் நீங்கள் தற்போது தொடரை வென்றுவிட்டது உறுதியாகிவிட்டது. ஆனால் நீங்கள் வெற்றியின் பக்கம் இருக்கும்போது பணிவாக பேசவேண்டியது அவசியம் என நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார்..
மேலும் முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்ன், ‘இது தேவையற்றது’ என்று கூறினார்..