இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்று தொடரை சமன் செய்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்ரிக்காவே வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை வகித்தது. இந்தச் சூழலில் இவ்விரு அணிகளுக்கான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியிலும் முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் விராட் கோலி 102 ரன்களும், ருத்ராஜ் கெய்க்வாட் 105 ரன்களும் எடுத்தனர். விராட் கோலி 53வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். பின்னர் 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், தொடக்க வீரர் எய்டன் மார்க்ராமின் அசத்தலான சதத்துடன் வெற்றிபெற்றது. அவர் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 110 ரன்கள் எடுத்தார். அவருக்குப் பிறகு வந்த கேப்டன் பவுமா 46 ரன்களும், மேத்யூ பிரீட்ஷ்க் 68 ரன்களும், டெவால்டு பிரிவிஸ் 54 ரன்களும் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தனர். அவ்வணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இருஅணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளன. 3வது ஒருநாள் போட்டி, டிசம்பர் 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது.