தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான் cricinfo
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி| வேகப்பந்துவீச்சில் மிரட்டிய தென்னாப்ரிக்கா.. 107 ரன்னில் பிரமாண்ட வெற்றி!

2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆப்கானிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென்னாப்பிரிக்கா.

Rishan Vengai

2025 சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு தகுதிபெறும் அணிகளாக பார்க்கப்படும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்றைய போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசென், முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் கடைசி நேரத்தில் விளையாடவில்லை என்ற அறிவிப்பு வந்தது..

AFG vs SA

தலைசிறந்த சுழற்பந்துவீச்சு தாக்குதலை வைத்திருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஹென்ரிச் கிளாசென் இல்லாதது, தென்னாப்பிரிக்காவிற்கு பின்னடைவாக இருக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், கராச்சியில் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.

315 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா..

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்வுசெய்ய, ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசியது. தொடக்க வீரராக களமிறங்கிய ரியான் ரிக்கல்டன், 7 பவுண்டரிகள் 1 சிக்சர் என அதிரடியாக விளையாடி முதல் ஒருநாள் சதமடித்து அசத்தினார்.

ரியான் ரிக்கல்டன்

உடன் அடுத்தடுத்து வந்த பவுமா, டஸ்ஸென், மார்க்ரம் என அனைத்து வீரர்களும் அரைசதமடித்து அசத்த, 50 ஓவரில் 315 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்கா.

வேகத்தில் மிரட்டிய தென்னாப்பிரிக்கா!

316 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக, ககிசோ ரபாடா, மார்கோ யான்சன் மற்றும் லுங்கி இங்கிடி என மூன்று தென்னாப்பிரிக்கா பவுலர்களும் வேகத்தில் திணறடித்தனர்.

தொடக்க வீரர் குர்பாஸை லுங்கி இங்கிடி வெளியேற்றி விக்கெட் எண்ணிக்கையை தொடங்கிவைக்க, ஜத்ரானின் ஸ்டம்பை தகர்ந்தெறிந்து வெளியேற்றினார் ரபாடா. அடுத்தடுத்து வந்த வீரர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல விக்கெட்டை சரிய விட்டனர்.

ஆப்கானிஸ்தான்

மறுமுனையில் தனியொரு ஆளாக போராடிய ரஹ்மத் ஷா 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 90 ரன்கள் அடித்து சதம் நோக்கி முன்னேறினார். சதமடித்தால் சாம்பியன்ஸ் டிராபியில் சதமடிக்கும் முதல் ஆப்கானிஸ்தான் வீரராக சாதனை படைப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில், 90 ரன்னில் அவுட்டாகி சதத்தை மட்டுமில்லாமல் சாதனையையும் தவறவிட்டார் ரஹ்மத் ஷா.

முடிவில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சாம்பியன் அணிபோல் விளையாடிய தென்னாப்பிரிக்கா, 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்தது. சதமடித்த ரியான் ரிக்கல்டன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரபாடா

நாளை நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி.