SLvSA
SLvSA ICC
கிரிக்கெட்

தென்னாப்பிரிக்க பேட்டர்களை சமாளிக்குமா இலங்கையின் பந்துவீச்சு?

Viyan
போட்டி 4: தென்னாப்பிரிக்கா vs இலங்கை
மைதானம்: ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானம், அர்ஜுன் ஜெட்லி மைதானம், டெல்லி
South Africa versus Sri Lanka 2023 world cup
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 7, மதியம் 2 மணி

இலங்கை, தென்னாப்பிரிக்கா 2007 முதல் 2015 வரை மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இந்த அணிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டன. இலங்கை 2 ஃபைனல், ஒரு காலிறுதி என கலக்கியது. தென்னாப்பிரிக்காவோ 2 முறை அரையிறுதிக்கும், ஒரு முறை காலிறுதிக்கும் முன்னேறியது. ஆனால் 2019 உலகக் கோப்பையில் இந்த இரண்டு அணிகளுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறத் தவறின. இரண்டு அணிகளும் தலா 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற, இலங்கை ஆறாவது இடமும், தென்னாப்பிரிக்கா ஏழாவது இடமும் பெற்று வெளியேறின. கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் சர்வதேச அரங்கில் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் இவ்விரு அணிகளும் நிச்சயம் இம்முறை பெரும் முன்னேற்றம் காண விரும்பும். அதிலும் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய கடைசி 3 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவே வென்றிருக்கிறது. இதை இலங்கை அணி இம்முறை மாற்ற விரும்பும்.

பேட்டிங் பலத்தை நம்பிக் களமிறங்கும் தென்னாபிரிக்கா:

வழக்கமாக பலமான வேகப்பந்துவீச்சு யூனிட்டைக் கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி இம்முறை காயங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எய்ன்ரிக் நார்கியா, சிசாண்டா மகாலா ஆகியோர் காயத்தால் உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை. முன்னணி வீரர்கள் ரபாடா, எங்கிடி ஆகியோரும் சொல்லிக்கொள்ளும் ஃபார்மில் இல்லை. அதனால் அந்த அணியின் பந்துவீச்சு கவலை தரும் வகையில் தான் இருக்கிறது. அதனால் அந்த அணி தங்களின் பேட்டிங்கையே பெரிதும் நம்பியிருக்கிறது. அந்த நம்பிக்கைக்கு ஏற்றது போல் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவருமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அவர்களுக்கு மலையளவு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஹெய்ன்ரிச் கிளாசன் இப்போது எந்த அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார்.

தங்கள் அணியின் பேட்டிங் பற்றிப் பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா, "நிச்சயமாக கிளாசன் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். மிடில் ஆர்டரை அவர் சிறப்பாக வழிநடத்துகிறார். எந்த வகையிலும் அவரைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் எங்கள் தொடக்க வீரர்கள் கொடுக்கும் நல்ல அடித்தளமும் கிளாசனின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அது குவின்டன் டி காக் ஆக இருக்கட்டும், ரஸி வேன் டெர் டுசனாக இருக்கட்டும் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதைத் தொடரும்போது, கிளாசன் மட்டுமல்ல டேவிட் மில்லர், எய்டன் மார்க்ரம் போன்றவர்களாலும் நெருக்கடி இல்லாமல் அடித்து ஆட முடியும்" என்று கூறினார்.

இலங்கைக்கு இன்னொரு நட்சத்திரமும் இல்லை:

தென்னாப்பிரிக்காவைப் போலவே இலங்கை அணியும் காயங்களால் அவதிப்பட்டுவருகிறது. ஏற்கெனவே அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா காயத்தால் ஆடாத நிலையில், மஹீஷ் தீக்‌ஷனா இந்த முதல் போட்டியில் ஆடுவதும் கேள்விக்குறியாயிகிறது. போதாக்குறைக்கு குசல் பெரேரா, கேப்டன் தசுன் ஷனகா போன்றவர்களும் சமீபத்திய காயங்களால் பயிற்சி போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தனர். அவர்கள் இந்தப் போட்டிக்குத் திரும்பிவிருவார்கள் என்றாலும், இந்த இலங்கை அணி ஒரு முழுமையான அணியாகத் தெரியவில்லை. நல்ல ஃபார்மில் இருக்கும் தனஞ்சயா டி சில்வா, மதீஷா பதிரானா, பயிற்சிப் போட்டியில் சதமடித்த குசல் மெண்டிஸ் போன்ற வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மைதானம் எப்படி?

இந்த ஃபெரோஷ் ஷா கோட்லா ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பெருமளவு சாதகமாக இருக்கும். இங்கு பெரிய ஸ்கோர்களை எதிர்பார்க்க முடியாது. இலங்கை அணியில் நல்ல ஸ்பின்னர்கள் இருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் ஸ்பின்னை சிறப்பாகக் கையாளும் நல்ல பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அந்த போட்டி இந்த ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கலாம்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

தென்னாப்பிரிக்கா - எய்டன் மார்க்ரம்: கிளாசன் வேற லெவல் ஃபார்மில் இருக்கிறார் என்றாலும், மார்க்ரம் பேட்டிங், பௌலிங் என இரண்டு ஏரியாவிலும் பங்களிக்க முடியும். ஸ்பின்னை சிறப்பாகக் கையாளக் கூடிய மார்க்ரம், தன் ஆஃப் ஸ்பின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலாகவும் அமைவார்.

இலங்கை - தனஞ்சயா டி சில்வா: மார்க்ரம் போலத்தான் இவரும். தன் ஆஃப் ஸ்பின்னால் தேவைப்படும் நேரத்தில் விக்கெட் எடுத்துக் கொடுக்கக்கூடியவர், அந்த அணியின் மிடில் ஆர்டரிலும் அரணாக விளங்குவார். வழக்கம்போல் இலங்கை அணி பேட்டிங்கில் சொதப்பினால், இவர்தான் அவர்களின் ஆபத்பாந்தவனாக இருப்பார்.

வெற்றிவாய்ப்பு:

இரு அணிகளுக்குமே சரிசம வெற்றி வாய்ப்பு இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி இன்னும் சற்று அருகில் வரும்.