லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் x
கிரிக்கெட்

இது தென்னாப்ரிக்காவின் பொற்காலம்.. அறிமுக டெஸ்ட்டில் சதமடித்த 19 வயது வீரர்! 61 வருட சாதனை உடைப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய கையோடு ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது தென்னாப்பிரிக்கா அணி.

Rishan Vengai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று 26 வருட கோப்பை வறட்சியை முடிவுக்கு கொண்டுவந்திருக்கும் தென்னாப்பிரிக்கா அணி, ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

கேப்டன் டெம்பா பவுமா தொடரிலிருந்து விலகிய நிலையில், அணியை கேசவ் மகாராஜ் கேப்டனாக வழிநடத்துகிறார்.

sa vs zim

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அறிமுக போட்டியில் அரைசதமடித்த டெவால்ட் பிரேவிஸ்..

பரபரப்பாக தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்கள் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர் சிவாங்கா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்த 55 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென்னாப்பிரிக்கா.

ஆனால் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அறிமுக போட்டியில் களமிறங்கிய 19 வயது பிரிட்டோரியஸ் மற்றும் அறிமுக போட்டியில் களமிறங்கிய 22 வயது டெவால்ட் பிரேவிஸ் ஜோடி 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தியது. 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய பிரேவிஸ், தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் 41 பந்துகளுக்கு 51 ரன்கள் அடித்து வெளியேறினார்.

19 வயதில் சதம் விளாசி சாதனை!

பிரேவிஸ் வெளியேறிய பிறகும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 19 வயது வீரர் பிரிட்டோரியஸ் 11 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என விளாசி சதமடித்து அசத்தினார். இதன் மூலம் இளம் வயதில் (19 வயது 93 நாட்கள்) அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய முதல் தென்னாப்பிரிக்கா வீரராக வரலாறு படைத்தார்.

லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்

1964-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறிமுக போட்டியில் சதமடித்த தென்னாப்பிரிக்காவின் க்ரீம் பொல்லாக், இளம் வயதில் (19 வயது 317 நாட்கள்) அறிமுக டெஸ்ட்டில் சதமடித்த தென்னாப்ரிக்க வீரராக சாதனை படைத்திருந்தார். அவருடைய 61 வருட சாதனையை தற்போது தகர்த்துள்ளார் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்.