ganguly - rohit sharma
ganguly - rohit sharma twitter
கிரிக்கெட்

"உலக கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பை வெல்வதுதான் கடினம்!” - சவுரவ் கங்குலி

Rishan Vengai

லண்டனில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. அதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறிவருகிறார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா. இந்நிலையில், ரோகித் சர்மாவின் திறமை மீது எந்த சந்தேகமும் இல்லை, அவர் மீது நம்பிக்கை இருக்கிறது என்று ஆதரவு குரல் கொடுத்துள்ளார் சவுரவ் கங்குலி.

விராட் கோலிக்கு பதிலாக ரோகித் சிறந்த கேப்டனாக இருப்பார் என நினைத்தேன்! - கங்குலி

ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி, “விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறிய பிறகு இந்திய அணிக்கு கேப்டன் தேவைப்பட்டார். அந்த நேரத்தில் ரோகித் சர்மா சிறந்தவராக தெரிந்தார். 5 ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றியதோடு சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டார். அதனால் தான் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஆசிய கோப்பையை வென்ற ரோகித் சர்மா இந்திய அணியின் சிறந்த தேர்வாக மாறினார். அவர் தலைமையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிவரை இந்தியா சென்றுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் தோல்வியடைந்தோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட, நாங்கள் WTC இறுதிப் போட்டியில் தோல்வியை தான் பெற்றிருந்தோம். ஆனால் ரோகித் சர்மா கேப்டன்சியில் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியை எட்டினோம். எனவே, தேர்வாளர்கள் இந்திய கேப்டன் பணிக்கு சிறந்த நபரைத் தான் தேர்ந்தெடுத்துள்ளனர் ” என்று ஆஜ் தக்கிடம் கங்குலி கூறியுள்ளார்.

உலக கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பை வெல்வது கடினம்!- சவுரவ் கங்குலி

ரோகித் மீது அதிக நம்பிக்கை உள்ளதாக தெரிவித்திருக்கும் கங்குலி கூறுகையில், “ரோகித் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவரும் எம்எஸ் தோனியும் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளனர். ஐபிஎல்லில் இத்தனை கோப்பைகளை வெல்வது மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனென்றால் ஐபிஎல் கடினமான ஒரு தொடராகும். உலகக் கோப்பையை வெல்வதை விட ஐபிஎல்லை வெல்வது கடினமானது.

Rohit Sharma

உலகக்கோப்பையின் அரையிறுதிக்கு செல்ல நீங்கள் 4-5 போட்டிகளில் வெற்றிபெற்றாலே போதுமானது. ஆனால் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளுக்குப் பிறகு தான் உங்களால் அரையிறுதிக்கே முன்னேற முடியும். நீங்கள் ஒரு ஐபிஎல் சாம்பியன் ஆவதற்கு 17 போட்டிகள் தேவை. எனவே உலகக்கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது மிகவும் கடினம்” என்று கங்குலி மேலும் கூறியுள்ளார்.