இந்தியா-பாகிஸ்தான் கைக்குலுக்கவில்லை சர்ச்சை குறித்து சவுரவ் கங்குலி web
கிரிக்கெட்

பாகிஸ்தான் உடன் கைக்குலுக்காத இந்திய வீரர்கள்.. சவுரவ் கங்குலி ஆதரவு!

துபாயில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றிபெற்றபிறகு, பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்காமல் தவிர்த்தது சர்ச்சையாக மாறியது.

Rishan Vengai

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி துபாயில் நடைபெற்ற போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இதில், பாகிஸ்தான் நிர்ணயித்த 127 ரன்களை, இந்திய அணி வெகு விரைவாகவே எட்டிப்பிடித்து வெற்றிவாகை சூடியது. எனினும், இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ind vs pak

ஆட்டத்திற்குப் பிறகு வழக்கமான கைகுலுக்கலுக்காக பாகிஸ்தான் வீரர்கள் காத்திருந்தபோது, ​​இந்திய வீரர்கள் யாரும் மைதானத்தில் காணப்படவில்லை. மேலும் இந்திய அணியின் டிரஸ்ஸிங் அறையின் கதவை மூடும் காட்சிகளும்கூட காணப்பட்டன. அப்போது, பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மைக் ஹெசன் கை கொடுக்க இந்திய அணியின் அறை நோக்கிச் சென்றபோதும், இந்திய வீரர்கள் வெளியே வராமல் கை குலுக்க மறுத்ததால், பாகிஸ்தான் அணியினர் அதிருப்தியடைந்தனர்.

ind vs pak

மறுபுறம், போட்டிக்குப் பிறகு பரிசளிப்பின்போதுகூட பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா செல்லவில்லை. செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் இந்தியாவின் செயலை விமர்சித்தார்.

கேப்டன் சூர்யகுமார் பளீச் பதில்..

பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்காதது குறித்து பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “எங்கள் அரசும், பிசிசிஐயும் இந்த விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருந்தன. நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம், அதற்கான சரியான பதிலடியைக் களத்தில் கொடுத்துள்ளோம். விளையாட்டு உணர்வையும் தாண்டிய சில விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளன என்று நான் நினைக்கிறேன். இதை நான் ஏற்கனவே பரிசளிப்பு விழாவிலேயே கூறிவிட்டேன். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருடனும், அவர்களது குடும்பங்களுடனும் நாங்கள் உறுதியாகத் துணை நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.

pakistan

நான் சொன்னது போல, இந்த வெற்றியை 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடத்திய நமது துணிச்சல் மிக்க ராணுவப் படைகளுக்கு நாங்கள் சமர்ப்பிக்கிறோம். அவர்கள் தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளிப்பதைப் போல, எங்களால் முடிந்தபோதெல்லாம், அவர்களைப் புன்னகைக்க வைக்கும் வாய்ப்புகளைக் களத்தில் ஏற்படுத்திக் கொடுப்போம்” என்று பேசினார்.

சூர்யகுமார் முடிவுக்கு கங்குலி ஆதரவு..

பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்காத முடிவு குறித்து பேசியிருக்கும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, “போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டவுடன் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்க வேண்டியிருந்தது. கைகுலுக்கலைப் பொறுத்தவரை, அவர் இந்தியாவின் கேப்டன். அது அவரது விருப்பம். எனவே, அவர் எந்த முடிவை எடுத்தாலும், அதை அவர் எடுத்துள்ளார்" என்று பேசினார்.

மேலும் இந்திய அணி எப்படி இருக்கிறது என்பது குறித்து பேசிய கங்குலி, “இந்திய அணி மிகவும் வலுவான அணியாக இருக்கிறது. ஆனால் டி20 போட்டியை பொறுத்தவரையில் அன்றைய போட்டியில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ, அவர்களுக்கே வெற்றிசேரும். போட்டி எப்படி அமையும் என்பதை நம்மால் முன்னரே கூறமுடியாது. ஆனால் பேப்பரில் இந்திய அணியே வலுவாக அணியாக இருக்கிறது” என்று NDTV உடன் பேசியுள்ளார்.