சூர்யவன்ஷி web
கிரிக்கெட்

ஜிம்பாப்வேவுக்கு எதிராக மீண்டும் அரைசதம்.. முதல் உலக வீரராக சூர்யவன்ஷி படைத்த வரலாற்று சாதனை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அரைசதமடித்து சூர்யவன்ஷி புதிய சாதனை படைத்தார்..

Rishan Vengai

ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது டி20யில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 16 ஓவரில் 152/3 என விளையாடும் நிலையில், 16 வயதுக்குள் இரண்டு சர்வதேச அரைசதங்கள் அடித்த முதல் உலக வீரராக வைபவ் சூர்யவன்ஷி வரலாறு படைத்துள்ளார். இரண்டாவது, மூன்றாவது போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து, 49 பந்தில் 81 ரன்கள் குவித்து இந்திய அணியை முன்னிலையில் நிறுத்தினார்.

அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கான டி20 தொடரை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா இழந்த நிலையில், அடுத்து ஜிம்பாப்வேவுக்குச் சென்றுள்ளது. அந்த அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 

shreyas iyer

முதலிரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் தொடர்ந்து 2 தொடரில் தோல்வியை தழுவியிருந்த இந்திய அணி, முதல் தொடரை வென்று அசத்தியது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி ஹராரே மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 2 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் மறுமுனையில் இருந்த வைபவ் சூர்யவன்ஷி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்தில் அரைசதமடித்து அசத்தினார்.

8 பவுண்டரிகள் 4 சிச்கர்கள் என துவம்சம் செய்த சூர்யவன்ஷி சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 49 பந்தில் 81 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 16 ஓவரில் 152/3 ரன்கள் அடித்து விளையாடிவருகிறது.

ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2வது போட்டி மற்றும் 3வது போட்டி இரண்டிலும் அரைசதமடித்த சூர்யவன்ஷி, 16 வயதுக்குள் 2 சர்வதேச அரைசதமடித்த முதல் வீரராக வரலாறு படைத்தார். இதற்கு முன்பு நேபாள் வீரர் குஷால் மல்லா 1 அரைசதமடித்திருந்தார்.