Tanveer Ahmed - Sooryavanshi x / bcci
கிரிக்கெட்

சூர்யவன்ஷியை டெஸ்ட் செய்யவேண்டும்.. 20-21 வயதானதை மறைக்கிறார்! - பாகிஸ்தான் வீரர் கேள்வி

சூர்யவன்ஷி 20-21 வயதானதை மறைப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Rishan Vengai

வைபவ் சூர்யவன்ஷியின் உண்மையான வயதைக் கண்டறிய ஐசிசி (ICC) ஒரு முழுமையான விசாரணையை நடத்த வேண்டும். அவர் பாகிஸ்தானின் 19 வயதுக்குட்பட்ட (U19) வீரர்களை விட மிகவும் வயதானவராகத் தெரிகிறார். அவருக்குக் குறைந்தது 19 வயது அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

15 வயதில் தன்னுடைய அசாத்திய திறமையால் கிரிக்கெட் உலகையே மிரட்டிவரும் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி, உள்நாட்டு கிரிக்கெட்டில் வெறும் 52 பந்தில் இரட்டை சதமடித்து எல்லோரையும் பிரமிக்க வைத்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் மட்டும் 28 சிக்சர்களை அடித்து உலக சாதனை படைத்திருக்கும் அவர், 11 டாட் பந்துகளை விளையாடியபோதும் அதிவேக இரட்டை சதமடித்தது, 2 நாட்களாகியும் பேசுபொருளாகவே உள்ளது. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டையும் கலங்கடித்துள்ளது.

சூர்யவன்ஷி இரட்டை சதம்

15 வயதில் எப்படி 28 சிக்சர்களை இவ்வளவு எளிதாக அடிக்க முடியும்? சூர்யவன்ஷியின் பேட்டிங் திறமை அபாரமானதுதான் என்றாலும், அவருக்கு 15 வயது தான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என வைபவ் சூர்யவன்ஷியின் சமீபத்திய இன்னிங்ஸ் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அகமது பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சூர்யவன்ஷியின் வயதை கேள்வி எழுப்பியிருக்கும் தன்வீர் அகமது, “அவர் கிட்டத்தட்ட 50 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். அவரது பேட்டிங்கைப் பார்க்கும்போது, ​​பிரமிப்பாக இருக்கிறது! அவருக்கு நிச்சயமாக 15 வயது இருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் 20 முதல் 21 வயதாவது இருக்கும். அவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், ஒரு 15 வயது சிறுவனால் சோர்வடையாமல் 50 பந்துகளில் 28 சிக்ஸர்களை எப்படி அடிக்க முடியும்?

இதை யாராலும் செய்ய முடியாது. ஒரு 15 வயது சிறுவனின் அடித்தளம் அவ்வளவு வலுவாக இருக்காது. எந்த பதின்ம வயதினரின் தோள்களும் அவ்வளவு வலுவாக இருக்காது. அவன் பேட்டிங் செய்யும்போது, ​​ஏதோ வீடியோ கேம் விளையாடுவது போல எளிதாக சிக்ஸர்களை அடிக்கிறான். வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயது என்பதை நான் நம்பவில்லை. அவனுக்குப் பரிசோதனை செய்து, அவனது உண்மையான வயதை ஐசிசி நிச்சயம் வெளிப்படுத்த வேண்டும்' என பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தன்வீர் அகமது கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒருபக்கம் பாகிஸ்தானின் தன்வீர் அகமது சூர்யவன்ஷியின் வயதை கேள்வி எழுப்பியிருந்தாலும், மற்ற பாகிஸ்தான் வீரர்கள் சூர்யவன்ஷியின் பேட்டிங் திறமையை பாராட்டியுள்ளனர். முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஜாவேத் மியாண்டாத், சூர்யவன்ஷியை “தரம் வாய்ந்த, நேர்த்தியாக அடிக்கும் வீரர்” என பாராடியதோடு, துள்ளலான ஆடுகளங்களில் அவரால் என்னமாதிரியான பந்துவீச்சையும் எளிதாக தகர்க்க முடியும் என்று கூறினார்.

அதேபோல பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களான கம்ரான் அக்மல், பாசித் அலி போன்றவர்களும் சூர்யவன்ஷியை ஆட்டத்தை பாராட்டியுள்ளனர்.