சூர்யவன்ஷி x
கிரிக்கெட்

57 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் சூர்யவன்ஷி.. 8 ரன்னில் மிஸ்ஸான சச்சின் சாதனை!

துலீப் டிராபி அரையிறுதிப்போட்டியில் 92 ரன்கள் அடித்த சூர்யவன்ஷி 8 ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்..

Rishan Vengai

2026 துலீப் டிராபி அரையிறுதியில் கிழக்கு மண்டலத்துக்காக விளையாடிய 15 வயது 157 நாட்கள் கொண்ட சூர்யவன்ஷி, 42 பந்துகளில் அரைசதம் அடித்து, 57 ஆண்டுகள் பழமையான லக்ஷ்மன் சிங் சாதனையை முறியடித்தார். 7 பவுண்டரி, 7 சிக்ஸர் சேர்த்து 81 பந்துகளில் 92 ரன்கள் எடுத்த அவர், சதமுக்கு 8 ரன் குறைவில் அவுட்டாகி, சச்சின் இளைய வயது சத சாதனையை தவறவிட்டார்.

2026 துலீப் டிராபி தொடர் மண்டல அணிகளுக்கு இடையே நடைபெற்றுவருகிறது. பரபரப்பாக நடந்துவரும் தொடரின் முதல் அரையிறுதிப்போட்டியில் சூர்யவன்ஷியின் கிழக்கு மண்டல அணி, மத்திய மண்டல அணியை எதிர்கொண்டு விளையாடிவருகிறது.

முதலில் பேட்டிங் செய்த மண்டல அணி 266 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய கிழக்கு மண்டல அணி முதல் விக்கெட்டுக்கே 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர். தொடக்க ஜோடியாக அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் சூர்யவன்ஷி களமிறங்கிய நிலையில், அபிமன்யு அரைசதமடித்து 69 ரன்னில் அவுட்டானார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சூர்யவன்ஷி 7 பவுண்டரிகள் 7 சிக்சர்களை பறக்கவிட்டு 92 ரன்கள் அடித்தார். ஆனால் சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட போது 8 ரன்களை அடிக்க முடியாமல் அவுட்டாகி வெளியேறினார். இப்படி சூர்யவன்ஷி 90+ ரன்கள் அடித்திருந்தபோது அவுட்டாவது இது 7வது முறையாகும். இது அவருடைய ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 11 சதங்களை சூர்யவன்ஷி அடித்துள்ளார்.

57 சாதனையை உடைத்த சூரய்வன்ஷி!

துலீப் டிராபி அரையிறுதிப்போட்டியில் அரைசதமடித்த சூர்யவன்ஷி தன்னுடைய 15 வயது 157 நாட்களில் புதிய மைல்கல்லை எழுதினார். துலீப் டிராபி வரலாற்றில் குறைவான வயதில் அரைசதமடித்திருந்த லக்‌ஷ்மன் சிங்கின் சாதனையை 57 ஆண்டுகளுக்கு பிறகு முறியடித்தார் சூர்யவன்ஷி.

இதற்கு முன்னர், 1969-ஆம் ஆண்டு தனது 16 வயது 23 நாட்களில் துலீப் கோப்பையில் அரைசதம் அடித்த மிக இளைய வீரராக லக்ஷ்மன் சிங் இருந்தார்.

சூர்யவன்ஷி, சுழற்பந்து வீச்சாளர் சரன்ஷ் ஜெயினை சிக்ஸருக்கு விளாசி, வெறும் 42 பந்துகளில் சாதனை அரைசதத்தை எட்டினார். இந்த மைல்கல்லை எட்டுவதற்குள் அவர் ஐந்து பவுண்டரிகளையும் மூன்று சிக்ஸர்களையும் அடித்திருந்தார்.

இடது கை தொடக்க ஆட்டக்காரர் தனது அரைசதத்திற்குப் பிறகும் அதிரடியாக ஆடி, தனது முதல் தரப் போட்டிகளில் முதல் சதத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். ஆனால், ஏழு பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் அடங்கிய அந்த இன்னிங்ஸில், இறுதியில் 81 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் துலீப் டிராபியில் குறைவான வயதில் சதமடித்திருந்த சச்சின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு சூர்ய்வன்ஷிக்கு கிடைக்கவில்லை.