Smiriti Mandhana bcci
கிரிக்கெட்

ஒரே போட்டியில் 2 World Record.. சச்சினுக்கு பின் இந்தியாவின் கௌரவம்! வரலாற்றை புரட்டிப்போட்ட மந்தனா!

வெறும் 30 வயதில் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக மகுடம் சூடியுள்ளார் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா!

Rishan Vengai

மகளிர் ஆசிய கோப்பையில் ஹாங்காங்-சீனாவுக்கு எதிராக துபாயில் ஆடிய போட்டியில், இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 64 பந்தில் 124 ரன்கள் குவித்து ஆட்டத்தை கலக்கியார். 7 சிக்சர், 14 பவுண்டரிகள் அடித்த அவர், மிதாலி ராஜ் சாதனையை முறியடித்து 10880 ரன்களுடன் மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த உலக சாதனையைப் பதிவு செய்தார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், யுஏஇ, தாய்லாந்து, ஹாங் ஹாங்-சீனா, இந்தோனேசியா முதலிய 8 அணிகள் அடங்கிய மகளிர் ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்டு 28ஆம் தேதிமுதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

ஸ்மிருதி மந்தனா

இந்தியா மற்றும் ஹாங்காங்-சீன மகளிர் அணிகள் மோதிய போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங்-சீன அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் தொடக்க ஜோடியாக களமிறங்கிய இந்தியாவின் ஷபாலி வெர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் ஹாங்காங்-சீன பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். முதல் விக்கெட்டுக்கே இந்த ஜோடி 74 ரன்களை சேர்த்த நிலையில், 17 பந்தில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசிய ஷபாலி வெர்மா 28 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.

அதற்குபிறகு பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடிய ஸ்மிருதி 7 சிக்சர்களையும் 14 பவுண்டரிகளையும் பறக்கவிட்டு 57 பந்தில் சதமடித்து மிரட்டினார். இன்னிங்ஸ் முடிவில் 124 ரன்களை மந்தனா அடிக்க 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது இந்தியா.

2 உலகசாதனைகள் முறியடிப்பு!

இந்தப்போட்டியில் சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 2 உலகசாதனைகளை முறியடித்து வரலாறு படைத்தார் ஸ்மிருதி மந்தனா. மகளிர் கிரிக்கெட்டில் 10880 ரன்களை அடித்திருக்கும் ஸ்மிருதி மந்தனா, அதிக ரன்கள் அடித்த மிதாலிராஜின் நீண்டகால சாதனையை முறியடித்தார். அதேபோல 18வது சர்வதேச சதமடித்த ஸ்மிருதி, ஆஸ்திரேலியாவின் மெக் லானிங்கின் 17 சதங்கள் என்ற உலகசாதனையை முறியடித்து மிரட்டியுள்ளார். மேலும் டி20 கிரிக்கெட்டில் 2 சதங்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை மற்றும் 50 ரன்களுக்கு மேல் 93முறை அடித்த 2வது உலக வீராங்கனை என்ற வரலாற்று சாதனைகளையும் படைத்துள்ளார்.

சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக 34357 ரன்களுடன் சச்சின் முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவராக 10880 ரன்களுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து மகுடம் சூடியுள்ளார். ஆடவர் - மகளிர் என இரண்டு வடிவ கிரிக்கெட்டிலும் இந்தியர்களின் ஆதிக்கம் உச்சத்திற்கு சென்றுள்ளது. 30 வயதில் மாபெரும் வரலாற்றை படைத்திருக்கும் மந்தனாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது!