ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலிரண்டு ஒருநாள் போட்டிகளையும் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் ஆல்ரவுண்டர் அனபெல் சதர்லேண்ட் சதமடித்து 110 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா 50 ஓவரில் 298 ரன்கள் சேர்த்தது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 298 ரன்கள் குவிக்க, 299 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய ரிச்சா கோஸ் 2 ரன்னில் விரைவாகவே அவுட்டாகி வெளியேற, 2வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஹர்லீன் இருவரும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 100 ரன்கள் பார்ட்னர்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினார்.
ஹர்லீன் 39 ரன்கள் எடுத்திருந்தபோது பவுலரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற, தொடர்ந்து அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்மிரிதி 13 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் என விளாசி 103 பந்தில் சதமடித்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவருக்கு 9வது சதமாகும்.
ஏற்கனவே அதிக ஒருநாள் சதங்கள் அடித்திருந்த மிதாலி ராஜ் (7 சதங்கள்) சாதனையை முறியடித்திருந்த ஸ்மிரிதி தொடர்ந்து அதன் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறார்.
போட்டியை பொறுத்தவரையில் சதமடித்த ஸ்மிரிதி மந்தனா 105 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் யாரும் சோபிக்கவில்லை. 215 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, 83 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன்மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா அணி.