ஸ்மிரிதி - ஓமர்சாய் web
கிரிக்கெட்

2024-ம் ஆண்டு சிறந்த கிரிக்கெட்டர் | 2வது முறையாக ஸ்மிரிதி.. முதல்முறையாக ஆப்கான் வீரர் தேர்வு!

ஐசிசி வழங்கும் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் ஒருநாள் வீராங்கனைக்கான விருதை வென்றார் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா.

Rishan Vengai

2024-ம் ஆண்டு முடிவடைந்து 2025-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சுழற்சி அட்டவணை துவங்கிவிட்டது. இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியையும், பெண்களுக்கான சிறந்த ஒருநாள் அணியையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. அதனுடன் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த டி20 கிரிக்கெட்டர்கள், சிறந்த அம்பயர் முதலிய விருதுகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது.

அந்தவகையில் தற்போது 2024-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டருக்கான விருது அறிவிப்பை ஆடவர் மற்றும் மகளிர் இரண்டு தரப்பிற்கும் வெளியிட்டுள்ளது.

2024-ம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் ODI கிரிக்கெட்டர் ஸ்மிரிதி..

இந்தியாவின் தொடங்க வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா, 2024-ம் ஆண்டு தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை கொண்டிருந்தார். கடந்தாண்டு அவர் இந்திய கிரிக்கெட்டில் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த இந்திய வீராங்கனை முதலிய பல்வேறு சாதனைகளை முறியடித்தார்.

2024-ல் 13 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 747 ரன்களுடன் அதிக ஒருநாள் ரன்கள் அடித்த உலக வீராங்கனையாக முடித்தார். 57.86 சராசரியுடன் 95.15 ஸ்டிரைக்ரேட்டுன் விளையாடிய ஸ்மிரிதி 2024 ஒரே ஆண்டில் 4 சதங்களை அடித்து மிரட்டினார்.

இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் ஒடிஐ கிரிக்கெட்டர் வீரர் விருதை வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் அவர் ஐசிசி ODI கிரிக்கெட்டர் 2018, ஐசிசி கிரிக்கெட்டர் 2018, ஐசிசி கிரிக்கெட்டர் 2021 மற்றும் ஐசிசி ODI கிரிக்கெட்டர் 2024 என 4 ஐசிசி விருதுகளை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

2024-ம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் ODI கிரிக்கெட்டர் ஓமர்சாய்..

ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் வீரரான அஸ்மதுல்லா ஓமர்சாய், 2024-ம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டர் விருதை வென்று அசத்தியுள்ளார். இவர் ஐசிசியின் 2024 சிறந்த ஒருநாள் அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

2024-ல் 14 போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 52 சராசரியுடன் 417 ரன்களும், 20 சராசரியுடன் 17 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தியிருந்தார்.