2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியானது ஆஸ்திரேலியாவா? தென்னாப்பிரிக்காவா? எந்த அணி கோப்பை வெல்லப்போகிறது என்ற விறுவிறுப்பான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 282 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில், 4வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்துவரும் தென்னாப்பிரிக்கா அணி 213/2 என வலுவான நிலையில் உள்ளது. வெற்றிப்பெற இன்னும் 69 ரன்களே மீதமுள்ள நிலையில், 102 ரன்களுடன் எய்டன் மார்க்ரம் மற்றும் 65 ரன்களுடன் டெம்பா பவுமா இருவரும் களத்தில் நீடிக்கின்றனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது 2 ரன்னில் பவுமா கேட்ச்சை ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் ஸ்லிப் ஃபீல்டிங்கில் தவறவிட்டார். இது இறுதிப்போட்டியை வெல்லும் நிலைமைக்கு தென்னாப்பிரிக்காவை எடுத்துச்சென்றுள்ளது.
இதேபோலான சம்பவம் இதே நாளில் 1999 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா வீரர் முக்கியமான கேட்ச்சை தவறவிட்டு, ஆஸ்திரேலியா அணி கோப்பை வெல்ல காரணமாக அமைந்தது. இது வரலாறு மீண்டும் திரும்பியதை எடுத்துக்காட்டுகிறது.
ஜுன் 13 1999 உலகக்கோப்பையின் - சூப்பர் 6 சுற்றில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 272 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடியது ஆஸ்திரேலியா. சேஸிங்கில் 48 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற, 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் வா மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரும் அரைசதமடித்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டுஎடுத்துவந்தனர்.
அப்போது 56 ரன்னில் பேட்டிங் செய்த ஸ்டீவ் வாவின் எளிமையான கேட்ச்சை மிட் விக்கெட்டில் நின்று கொண்டிருந்த கிப்ஸ் கோட்டைவிடுவார். கையில் கேட்ச்சை பிடித்த அடுத்த நொடி கொண்டாட்டத்திற்கு சென்ற அவர், அதை தவறவிட இறுதிவரை ஆட்டமிழக்காமல் 120 ரன்கள் அடித்த ஸ்டீவ் வா அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்று சூப்பர் 6-ல் டாப் இடத்தை தக்கவைப்பார். ஒருவேளை அன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றிருந்தால் டாப் 4-ல் இடம்பெறாமல் வெளியேறியிருக்கும்.
பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டு அணிகளும் அரையிறுதியில் மோதும்போது, இரண்டு அணிகளும் 213 ரன்கள் அடித்து போட்டி சமனாக ஆட்டத்தின் வெற்றியாளராக ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். புள்ளிப்பட்டியலில் ஒரே புள்ளிகளுடன் இருந்தாலும் நல்ல ரன்ரெட்டுடன் இருந்ததால் ஆஸ்திரேலியா தகுதிபெற்று, தென்னாப்பிரிக்கா வெளியேறும். 1999 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வென்று அசத்தும் ஸ்டீவ் வா தலைமையிலான ஆஸ்திரேலியா. பேட்டிங் பவுலிங் இரண்டிலும் திறமையான செயல்பட்ட தென்னாப்பிரிக்கா அணியே கோப்பை வெல்லும் என அப்போதும் கூறப்பட்டது. ஆனால் ஒரு கேட்ச்சை தவறவிட்டதால் எல்லாம் மாறிப்போனது.
இந்த சூழலில் அதே ஜுன் 13-ம் தேதி 2025 WTC இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமாவின் கேட்ச்சை தவறவிட்டுள்ளார் ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித். எளிதாக பிடிக்கும் வகையில் ஸ்லிப்பில் வந்த கேட்ச்சை தவறவிட்ட ஸ்மித், கேட்ச்சை மட்டுமில்லாமல் இறுதிப்போட்டியையே தவறவிட்டுள்ளார். இந்த சம்பவம் சரியாக 26 வருடங்களுக்கு பிறகு அதேநாளில் திரும்பி நடந்துள்ளது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா கோப்பை வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.