பிசிசிஐயின் புதிய கட்டுப்பாடு விதிமுறைகளின் படி, இந்திய அணியின் சீனியர் வீரர்கள் உட்பட அனைத்து வீரர்களும் ரஞ்சிக்கோப்பை போட்டியில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, ஜடேஜா முதலிய வீரர்கள் ரஞ்சிக்கோப்பை போட்டியில் பங்கேற்று விளையாடிவருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியிலிருந்து உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரோகித் சர்மா, சுப்மன் கில், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் அனைவரும் பங்கேற்ற முதல் ரஞ்சிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3, 4, 1, 4 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இது ரசிகர்களிடையே பெரிய விமர்சனத்தை பெற்றுத்தந்தது.
ரஞ்சிக் கோப்பைக்கு திரும்பிய ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் மும்பை அணிக்காக விளையாடி சொற்ப ரன்களில் வெளியேறினர். அதேபோல ரிஷப் பண்ட்டும் டெல்லி அணிக்காக விளையாடி 1, 17 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்நிலையில் பஞ்சாப் அணிக்காக கேப்டனாக விளையாடிய சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 4 ரன்னில் வெளியேறினாலும், இரண்டாவது இன்னிங்ஸில் தரமான சதத்தை பதிவுசெய்து மிரட்டியுள்ளார்.
முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 55 ரன்னுக்கு சுருண்ட நிலையில், எதிர்த்து விளையாடிய கர்நாடகா அணி ஸ்மரன் ரவிச்சந்திரனின் இரட்டை சதத்தால் 475 ரன்கள் குவித்தது.
அதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய பஞ்சாப் அணியில் கேப்டன் சுப்மன் கில் மட்டும் தனியாளாக போராடி சதமடித்தார். 14 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என விளாசிய கில் 102 ரன்கள் எடுத்து அவுட்டாக, 213 ரன்களுக்கு சுருண்ட பஞ்சாப் அணி இன்னிங்ஸ் மற்றும் 207 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய அணியிலிருந்து ரஞ்சிப்போட்டிக்கு திரும்பிய அனைத்து வீரர்களும் சொதப்பிய நிலையில், சுப்மன் கில் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பாக பெர்ஃபாமன்ஸ் செய்திருப்பது ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுத்தந்துள்ளது. ஜடேஜா சௌராஷ்டிரா அணிக்காக விளையாடி ஒரே போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.