இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுத்த இந்தியா வெற்றிபெற்று தொடரை 1-1 என சமன்செய்துள்ளது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் சதத்தின் உதவியால் 387 ரன்கள் சேர்த்தது. அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களே சேர்த்தது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 100, ரிஷப் பண்ட் 74 மற்றும் ஜடேஜா 72 ரன்களும் அடித்து அசத்தினர்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் 3வது போட்டியில் இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் அடித்துள்ளதால் ஆட்டம் பரபரப்பான இடத்திற்கு நகர்ந்துள்ளது.
3வது நாள் ஆட்டத்தின் போது இந்தியா 387 ரன்களுக்கு ஆல் அவுட்டான போது, 3-ம் நாள் ஆட்டம் முடிய கடைசி 6 நிமிடங்கள் இருந்தது. அதனால் இந்தியாவிற்கு கிட்டத்தட்ட 3 ஓவர்கள் வீசும் வாய்ப்பு இருந்தது.
அதன்படி இங்கிலாந்து தொடக்கவீரர்கள் ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் களமிறங்கினர். இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரை பும்ரா வீச ஜாக் கிராவ்லி எதிர்கொண்டார். இந்தியா எப்படியாவது ஒரு விக்கெட்டையாவது வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் இருக்க, ஸ்டிரைக்கில் இருந்த ஜாக் கிராவ்லி நேரத்தை வீணடிப்பதில் கவனம் செலுத்தினார்.
முதலில் பும்ரா பந்துவீச ஓடிவரும்போது தடுத்து நிறுத்தி லாங் ஆனை நோக்கி கைக்காட்டிய ஜாக் கிராவ்லி பந்தை எதிர்கொள்ளாமல் நகர்ந்து சென்றார். ஆனால் லாங் ஆனில் எந்தவித நகர்வும் இல்லாமல் தான் இருந்தது. பிறகு பந்தை எதிர்கொண்ட கிராவ்லி, நன்றாக டிஃபன்ஸ் செய்து ஸ்ட்ரோக் வைத்தபிறகும் கையில் அடிப்பட்டதாக நடித்து கிளவுஸை கழற்றி பிஷியோவை அழைத்தார். ஆனால் அவருக்கு அடிபடவில்லை என்பது நன்றாகவே தெரிந்தது.
இதைப்பார்த்த பும்ரா கைத்தட்டி பாராட்டி கலாய்த்தார், கில் வாக்குவாதம் செய்தார். சுற்றி நின்ற இந்திய வீரர்கள் தண்ணீர், ஸ்நாக்ஸ் எல்லாம் கொண்டுவாங்க என்று கலாய்த்தனர். ஆனால் எதையும் காதில் போட்டுக்கொள்ளாத ஜாக் கிராவ்லி பேட்டை மாற்றவேண்டும் என மீண்டும் ஒரு அழைப்பை விடுத்தார். இப்போது கேப்டன் சுப்மன் கில் இம்பேக்ட் பிளேயரை கொண்டுவாருங்கள் என இங்கிலாந்து டக் அவுட்டிற்கு சிக்னல் காமித்து கலாய்த்தார். மேலும் ஜாக் கிராவ்லியிடம் கில் வாக்குவாதம் செய்ய, பென் டக்கெட் உள்ளே வந்தார். அப்போது உடனே கேஎல் ராகுல் நடுவில் வர இரண்டு இங்கிலாந்து வீரர்களும் நகர்ந்து சென்றனர். கடைசி 2 நாள் ஆட்டம் மீதமிருக்கும் சூழலில் லார்ட்ஸ் மைதானம் ஒரு சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்கப்போகிறது என்று ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.
மேலும் பல இந்திய ரசிகர்கள் அந்த இடத்தில் விராட் கோலி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்றும், லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி செய்த சம்பவத்தை இந்த இங்கிலாந்து வீரர்கள் மறந்துவிட்டனர் போல என்றும் கருத்திட்டு வருகின்றனர்.