rohit sharma - shreyas iyer web
கிரிக்கெட்

ஓபனாக பேசிய ஷ்ரேயாஸ்.. அதிருப்தியை ஏற்படுத்திய கேப்டன் ரோகித்தின் முடிவு! நடந்தது என்ன?

உள்நாட்டு கிரிக்கெட்டை விட இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முன்னுரிமை அளித்ததற்காக இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார் ஷ்ரேயாஸ் ஐயர். கடந்த ஒரு வருடத்திற்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்று 19வது அரைசதமடித்தார்.

Rishan Vengai

இந்திய இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், ஐபிஎல் போன்ற வணிகரீதியான கிரிக்கெட் தொடர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்பாததால் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுகள் இந்திய அணியிலிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மீது வைக்கப்பட்டு, அவர்கள் இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். உடல்ரீதியான பிரச்னையால் தான் தன்னால் விளையாட முடியவில்லை என்று கூறிய ஷ்ரேயாஸ் ஐயர், உடனடியாக ரஞ்சிக்கோப்பை போட்டிகளுக்கு திரும்பி விளையாடினார். அதன்பிறகு இந்திய அணியில் ஷ்ரேயாஸ் இடம்பெற்றார். ஆனால் இஷன் கிஷன் இன்னும் அணியில் சேர்க்கப்படவில்லை.

ஸ்ரேயாஸ் ஐயர்

கடந்தாண்டு இந்தியா ஒருநாள் போட்டிகளில் பெரிதாக விளையாடாத நிலையில், 2025-ம் ஆண்டுக்கான முதல் ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது.

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் முதலில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவதற்கு அழைக்கப்படவில்லை. பின்னர் விராட் கோலிக்கு காயம் ஏற்படவே ஷ்ரேயாஸ் அணியில் இடம்பெற்று விளையாடினார்.

shreyas iyer

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக அரைசதம் விளாசி வெற்றிக்கு பங்காற்றிய ஷ்ரேயாஸ் ஐயர், தன்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடியதே முக்கிய காரணம் என கூறியுள்ளார்.

தடுமாறிய அணியை காப்பாற்றிய ஷ்ரேயாஸ்..

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 19 ரன்னுக்கே இரண்டு விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. அப்போது 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர்  9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 36 பந்துகளுக்கு 59 ரன்கள் விளாசி இங்கிலாந்து அணியிடமிருந்து வெற்றியை தட்டிப்பறித்தார். முடிவில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி 3 போட்டிகள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து பவுலர்கள் ஆதிக்கம் செலுத்திய போது சுப்மன் கில் கூட பதட்டமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் 4வது வீரராக உள்ளே வந்த ஷ்ரேயாஸ் ஆர்ச்சர் பந்துவீச்சில் சிக்சர் பறக்கவிட்டது மட்டுமில்லாமல், அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டி பிரஸ்ஸரை இங்கிலாந்து அணியின் மேல் திருப்பிவிட்டார். விக்கெட் விழுந்தாலும், அழுத்தமான சூழல் இருந்தாலும் மிடில் ஆர்டரில் எப்படி இன்னிங்ஸை விளையாட வேண்டும் என்பதை ஷ்ரேயாஸ் எடுத்துக்காட்டினார்.

இந்நிலையில், அணி தடுமாற்றத்தில் இருந்தபோது ஷ்ரேயாஸின் தைரியமான ஆட்டத்தை பல முன்னாள் வீரர்கள் பாராட்டிவருகின்றனர்.

ரசிகர்களை அதிருப்தி அடைய செய்த முடிவு..

இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு பேசியிருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர், ‘முதலில் எனக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. நான் போட்டிக்கு முந்தைய நாள் இரவு படம் பார்த்துக்கொண்டிருந்தேன், அன்றைய இரவு அப்படியே தான் நீடிக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் திடீரென எனக்கு கேப்டனிடம் இருந்து அழைப்பு வந்தது, விராட் கோலிக்கு காலில் வீக்கம் இருப்பதால் நீங்கள் ஆடப்போகிறீர்கள் என்று கூறப்பட்டது. பின்னர் நான் உடனடியாக உறங்கசென்று போட்டிக்கு தயாரானேன்.

என்னுடைய வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும் என எனக்கு தெரியும். ஆசிய கோப்பையின் போதும் இதுதான் நடந்தது, திடீரென எனக்கு காயம் ஏற்பட்டு மாற்றாக உள்ளே வந்த வீரர் சதமடித்திருந்தார். என்னுடைய வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன், அதனால் தான் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது’ என்று கூறியுள்ளார்.

ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த கருத்து ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் 47 சராசரி வைத்திருக்கும் ஒருவர், மிடில் ஆர்டரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் ஒருவருக்கு அணியில் இடம் இல்லை என்றால், சாம்பியன்ஸ் டிரோபிக்காக இந்திய அணி பெரிதாக யோசிக்கவில்லை என ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் தன்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு உள்நாட்டு கிரிக்கெட் பெரிதும் உதவியாக இருந்ததாகவும் ஷ்ரேயாஸ் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேசுகையில், “உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு சீசன் முழுவதுமாக நான் விளையாடினேன். அது எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது. எப்படி என்னுடைய இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும், எந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பதை நான் நிறைய கற்றுக்கொண்டேன்” என பேசியுள்ளார்.