இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையில், யுவராஜ் சிங் கொடுத்த அதிகப்படியான நம்பிக்கையை தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்துவருகிறார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்தவிதம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற சாம்பியன் அணிகளை டாமினேட் செய்தவிதம் அனைத்தும் அவர் எப்படியான வீரர் என்பதை உலகமேடையில் நிரூபிக்கும் தருணங்களாக அமைந்தன.
ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் ஒரு கேப்டனாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் எவ்வளவு திறமையனாவர் என்பதை ஐபிஎல் என்ற தலைசிறந்த டி20 லீக் எடுத்துக்காட்டியுள்ளது. 3 வெவ்வேறு ஐபிஎல் அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றது, ஐபிஎல் கோப்பையை வென்றுகொடுத்தது என எந்த கேப்டனும் செய்யாத சில தரமான சம்பவங்களை கேப்டனாக செய்துள்ளார் ஸ்ரேயாஸ்.
இந்நிலையில் ரோகித் சர்மா ஒயிட்பால் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வுபெறும்போது, அடுத்த இந்திய கேப்டனாக ஸ்ரேயாஸ் இருப்பார் என்ற பார்வை தற்போது அதிகரித்துள்ளது.
ஐபிஎல்லில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிவரை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது மும்பை டி20 லீக்கில் சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணியை அரையிறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணி, அஜிங்கியா ரஹானே தலைமையிலான நமோ பாந்த்ரா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து நாளை அரையிறுதிப்போட்டியில் மோதவிருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதிப்போட்டி இரவு 7.30 மணிக்கு நடக்கவிருக்கிறது.
இந்நிலையில் கேப்டன்சி குறித்து கிறிக்பஸ் உடன் பேசியிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், “கேப்டன்சி நிறைய முதிர்ச்சியையும் பொறுப்பையும் கொண்டுவருகிறது. அணிக்கு சிறந்த முறையில் செயல்படவும் பங்களிக்கவும் நீங்கள் ஒரு கேப்டனாக எப்போதும் எதிர்பார்க்கப்படுகிறீர்கள், அதை நான் உண்மையில் விரும்புகிறேன்.
ஏனென்றால் ஒரு அணியாக ஏதாவது பெரிய தடையையோ அல்லது ஏதேனும் ஒரு வகையான துன்பத்தையே காணும் போதெல்லாம், அவர்கள் எப்போதும் கேப்டனை நோக்கி தான் வருவார்கள். நான் 22 வயதிலிருந்தே கேப்டனாக இருந்துவருவதால், எனக்கு நிறைய அனுபவம் கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன். நான் அப்படியான தருணங்களை ரசித்திருக்கிறேன், அதை ஏற்றுக்கொண்டேன். ஒரு அணிக்காக வெளியே வந்து கேப்டனாக வழிநடத்துவதை விரும்புகிறேன்" என்று ஸ்ரேயாஸ் ஐயர் பேசியுள்ளார்.