ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர் ட்விட்டர்
கிரிக்கெட்

ரோகித், கோலி வரிசையில் சத்தமின்றி சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

Prakash J

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று, (நவ.15) முதலாவது அரையிறுதிப் போட்டியில், மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. இன்றைய போட்டி, இந்திய ரசிகர்களுக்கு தீபாவளியாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. ஆம், ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் நியூசிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொண்டு பட்டாசாய் வெடிக்கத் தொடங்கினர்.

ரோகித் 47 ரன்கள் எடுத்து வெளியேறினாலும், சிக்ஸரில் சாதனை படைத்தார். விராட் கோலியோ ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஒருசில சாதனைகளை முறியடித்தார். அதில் 20 ஆண்டுகளாக உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்து சச்சின் வசம் இருந்த 673 ரன்களை இன்றைய போட்டியில் விராட் கோலி 711 ரன்கள் எடுத்து முறியடித்தார். மேலும் ஒருசில சாதனைகளையும் முறியடித்ததுடன், தொடர்ந்து நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளார்.

இதையும் படிக்க: WC அரையிறுதியில் தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் அவுட்... வரலாற்றை மாற்றி புதிய சாதனையில் விராட் கோலி!

இவருடன் இணைந்து விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயரும், இன்றைய போட்டியில் சத்தமின்றி சில சாதனைகளைச் செய்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் 70 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்ஸருடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் இந்திய அணி 350க்கும் மேற்பட்ட ரன்களைக் கடக்கவும் உதவினார். அவர் இன்றைய சதமடித்ததன் வாயிலாக ஒருசில சாதனைகளைப் படைத்துள்ளார்.

உலகக்கோப்பையில் 4வது விக்கெட்டுக்குப் பிறகு களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இடத்தில் உள்ளார். இதன்மூலம் நடப்புத் தொடரில் அவர் 511* ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஸ்டெய்ரிஸ் 499 ரன்களுடன் உள்ளார். 3வது இடத்தில் ஏ.பி.டிவில்லியர்ஸ் உள்ளார். அவர் 482 ரன்கள் எடுத்துள்ளார்.

இதையும் படிக்க: தொடர்ந்து சிக்ஸர் மழை: உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா!

மேலும் உலகக்கோப்பை தொடர் ஒன்றில் தொடர்ச்சியாக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ராகுல் டிராவிட்டுடன் 2வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் தொடர்ச்சியாக தலா 2 சதம் அடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 3 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அவர், கடந்த 2019இல் தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்துள்ளார்.

அதுபோல் உலகக்கோப்பையின் ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலிலும் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் 8 சிக்ஸர்கள் அடித்ததன்மூலம் இந்த இடத்தைப் பிடித்துள்ளார். இந்த வரிசையில் செளரவ் கங்குலி, யுவராஜ் சிங் தலா 7 சிக்ஸர்களுடன் 2வது இடத்திலும், கபில் தேவ், ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் தலா 6 சிக்ஸர்களுடன் 3வது இடத்தில் உள்ளனர். இந்தப் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: Unstoppable... ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா! சச்சினின் 20 ஆண்டு ரெக்கர்டை முறியடித்த விராட் கோலி!