shoaib akhtar shoaib akhtar File Photo/ interview
கிரிக்கெட்

“பாகிஸ்தான் வாரியம் பக்கமே போகாதனு அம்மா சொன்னாங்க..” ஓபனாக பேசிய சோயப் அக்தர்!

பாகிஸ்தானின் தலைமைத் தேர்வாளர் பொறுப்பை ஏற்பதாக வெளியான செய்திகளை ஷோயப் அக்தர் மறுத்துள்ளார்.

Rishan Vengai

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் எந்த தொடர்பும் வேண்டாம் என சோயப் அக்தர் உறுதியாக கூறியுள்ளார். தனது தாயின் ஆலோசனையை பின்பற்றுவதாகவும், தலைமைத் தேர்வாளர் பொறுப்பை ஏற்கும் செய்தி பொய்யானது எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஷோயப் அக்தருக்கு, இந்தியாவிலும் அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்தசூழலில் அவர் சமீபத்தில் பாகிஸ்தானின் அரசியல் குறித்து பேசிய கருத்து, இந்திய ரசிகர்களிடம் மேலும் வரவேற்பை பெற்றுள்ளது.

pcb

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததிலிருந்து, பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழு அமைப்பில் பெரிய மாற்றங்கள் நிகழப்போகிறது என்றும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தான் பாகிஸ்தான் ஆண்கள் அணியின் தலைமைத் தேர்வாளர் பொறுப்பை ஏற்பதாக வெளியான செய்திகளை சோயப் அக்தர் மறுத்துள்ளார் . பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் (பிசிபி) எந்த வகையிலும் ஈடுபடுவதில் தனக்குச் சிறிதும் விருப்பமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நேரலை நிகழ்ச்சியின் போது பேசிய அவர், ​​பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்தும் (PCB), பாகிஸ்தான் அரசியலிலிருந்தும் விலகி இருக்குமாறு தனது தாய் தன்னிடம் கூறியதாக சோயப் அக்தர் ஒருமுறை சொன்னதை நிகழ்ச்சித் தொகுப்பாளர் அக்தருக்கு நினைவூட்டினார்.

சோயப் அக்தர்

PCB தேர்வுக்குழு தலைவராவது குறித்து பேசியிருக்கும் அக்தர், “அப்படி எதுவும் இல்லை, கூறப்படுபவை அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானவை. நான் எனது கூற்றில் உறுதியாக இருக்கிறேன், என் தாயின் ஆலோசனையையே நான் பின்பற்றப் போகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குச் செல்வதில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லை. எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். தலைமைத் தேர்வாளர் பொறுப்பை ஏற்பது குறித்த இந்தச் செய்திகளையெல்லாம் நான் கேள்விப்படுகிறேன். இவையெல்லாம் பொய்யானவை, இதுபோன்ற கூற்றுகளில் துளியும் உண்மை இல்லை. நான் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னேற்றத்தை மட்டுமே விரும்புகிறேன்” என்று கூறினார்.