ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலை நடத்தியதில், அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது முதலிய பல அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. மேலும், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் வீடுகளை தேடித் தகர்த்தது இந்திய ராணுவம்.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவமே காரணம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்டிரி.
பஹல்காம் தாக்குதல் குறித்தும், இந்திய ராணுவம் குறித்தும் கருத்து தெரிவித்திருக்கும் ஷாகித் அப்ரிடி, ”காஷ்மீரில் 8 லட்சம் பேரை கொண்ட ராணுவம் இருந்தும் தாக்குதலை தடுக்க முடியவில்லை என்றால், ராணுவம் பயனற்றது.
ஒரு மணி நேரமாக பயங்கரவாதிகள் மக்களை கொன்றபோதிலும், 8 லட்சம் பேரில் ஒருவர் கூட அங்கு வரவில்லை, ஆனால் பாகிஸ்தானை மட்டும் குறை சொல்கிறார்கள்.
இந்தியாவே பயங்கரவாத செயல்களை நிகழ்த்தி சொந்த மக்களை கொன்றுவிட்டு, பாகிஸ்தான் மீது பழியை போடுவதாகவும், பாகிஸ்தான் இதுபோன்ற பயங்கரவாத செயல்களை ஆதரிக்காது எனவும்” கருத்து தெரிவித்துள்ளார்.
பஹல்கான் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தை குற்றஞ்சாட்டி பேசிய அப்ரிடிக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், தன்னுடைய எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்.
அவருடைய பதிவில், ”கார்கிலில் நாங்கள் உங்களைத் தோற்கடித்தோம். நீங்கள் ஏற்கனவே நிறைய வீழ்ந்துவிட்டீர்கள், இன்னும் எவ்வளவு வீழ்வீர்கள், பயனற்ற கருத்துக்களை தெரிவிப்பதற்கு பதிலாக உங்கள் எண்ணத்தை உங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துங்கள். எங்கள் இந்திய ராணுவத்தைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். பாரத் மாதா கி ஜெய்! ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
ஷிகர் தவானின் ரிப்ளைக்கு பதில் கொடுத்திருக்கும் அப்ரிடி “வெற்றி-தோல்வியை ஒதுக்கி வைப்போம். வா, கொஞ்சம் தேநீர் அருந்தலாம், ஷிகர். #FantasticTea” என பதிவிட்டுள்ளார்.