Punjap Kings
Punjap Kings X
கிரிக்கெட்

”இவரை தவறாக எடுத்துவிட்டோம்.. எங்களுக்கு வேண்டாம்!”- ஏலத்தில் நடந்த குழப்பம் குறித்து பஞ்சாப் கதறல்!

Rishan Vengai

ஐபிஎல் தொடரில் எப்போதும் சில குழப்பங்கள் ஏற்படுவது வழக்கம். ஒன்று ஒரு அணி அதிக விலையை ஏற்றிவிட்டு, மற்ற அணியை சிக்கலில் சிக்கவைத்துவிட்டு சென்றுவிடும். மற்றொன்று 10 கோடிவரை இரண்டு அணிகள் போட்டிப்போடும் வரை அமைதியாக இருக்கும் மற்ற அணி, இறுதிநேரத்தில் உள்ளே புகுந்து 2 அணியையும் ஏமாற்றி வீரரை தட்டிச்செல்லும். கடந்த 2023 ஐபிஎல் தொடரில் கூட இரண்டு அணிகள் 10 கோடிக்கு மேல் ஒரு வீரருக்கு போட்டிப்போட்ட நிலையில், அதிகபட்ச தொகைக்கு இறுதியாக கைதூக்கிய ஒரு அணியை ஏலத்தை நடத்துபவர் கவனிக்கவில்லை. இதனால் இறுதியாக கைத்தூக்கிய அணிக்கு வீரர் செல்லாமல், வேறு அணிக்கு வீரர் சென்றார். இந்த குளறுபடியால் ஒரு அணிக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த குளறுபடியில் முன்பு ஈடுபட்ட அணி வேறுயாரும் இல்லை டெல்லி கேபிடல்ஸ் அணி தான்.

இந்நிலையில் தான் இதேபோலான ஒரு குளறுபடி, தற்போது நடைபெற்ற 2024 ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த அணி ஷசாங் சிங் என்ற 19 வயது வீரருக்கு பதிலாக, அதே பெயரில் இருந்த 32 வயது ஷசாங் சிங் என்ற வீரரை ஏலத்தில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது?

ஏலம் நடைபெற்ற போது இந்திய நேரப்படி 7.47 PM மணியளவில் 19 வயது ஷசாங் சிங்கின் பெயர் ஏலத்தில் வாசிக்கப்பட்டது. ஆனால் அவரை எந்த அணியும் வாங்காததால் அவர் UNSOLD-ஆக விலைக்கு போகாமல் சென்றுவிட்டார்.

Punjap Kings

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் 7.50 PM மணியளவில் 32 வயது ஷசாங் சிங்கின் பெயர் வாசிக்கப்பட்டபோது, அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி கைத்தூக்கியது. கைத்தூக்கிய சிறிது நேரத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அமர்ந்திருந்த ப்ரீத்தி ஷிந்தா உட்பட அனைவருக்கும் முகம் சுருங்கியது. இந்த வீரர் தானா என்பது போல் ஒரு குழு அரட்டை நீடித்தது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிறகு வேறு எந்த அணியும் 32 வயது ஷசாங் சிங்கிற்கு செல்லாததால், அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கே சென்றார் 32 வயது ஷசாங் சிங்.

Punjap Kings

இந்நிலையில் தான் ஏலத்திற்கு பிறகு “நாங்கள் இந்த வீரரை தவறாக எடுத்துவிட்டோம், எங்களுக்கு வேண்டாம்” என பஞ்சாப் கிங்ஸ் அணி கூறியதாக தகவல் வெளியானது. இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், ரசிகர்கள் இப்படி கூடவா ஒரு ஐபிஎல் நிர்வாகம் இருக்கும் என ட்ரோல் செய்தனர்.

நடந்ததை விளக்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி!

ஷசாங் சிங்கின் ஏல விவகாரம் பேசுபொருளானதை அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் சிஇஒ சதிஷ் மேனன், ”ஐபிஎல் ஏலத்தில் ஒரே பெயரில் இருந்த இரண்டு வீரர்கள் குழப்பத்தை உருவாக்கினர். குழப்பம் ஏற்பட்டாலும் சரியான ஷஷாங்க் சிங் தான் களமிறங்கியுள்ளார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஏற்கனவே சில குறிப்பிடத்தக்க திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஐபிஎல்லிலும் அவரது திறமையை வெளிக்கொணர நாங்கள் தயாராக இருக்கிறோம்” என விளக்கமளித்திருந்தார். ஆனால் இவருடைய இந்த பதிவு அப்போ நடந்தது எல்லாம் உண்மை தானா என்பது போல் மேலும் ரசிகர்களை டிரிக்கர் செய்தது.

இந்நிலையில் மீண்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக, “ நாங்கள் ஏலத்தில் எடுத்திருக்கும் ஷஷாங்க் சிங் எப்போதும் எங்கள் இலக்கு பட்டியலில் இருந்துள்ளார். இதை பஞ்சாப் கிங்ஸ் தெளிவுபடுத்த விரும்புகிறது. ஒரே பெயரில் 2 வீரர்கள் பட்டியலில் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் தற்போது விலைக்கு இருக்கும் வீரரை அணியில் வைத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அவர் எங்கள் வெற்றிக்கு பங்களிப்பார் என்பதில் நம்பிக்கை இருக்கிறது. குழப்பம் வேண்டாம்” என தெளிவுபடுத்தியுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் பதிவிற்கு ரிப்ளை செய்த 32 வயது ஷசாங் சிங்!

பஞ்சாப் கிங்ஸ் அணியால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு ரிப்ளை செய்திருக்கும் ஷசாங் சிங், “எல்லாம் சரியாக முடிந்தது, என்மீது நம்பிக்கை வைத்ததற்கு மிக்க நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

எப்படி இருப்பினும் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களுடைய வீரர்களை விட்டுக்கொடுப்பதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்காட்டியுள்ளது.