இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய ஆறு புகழ்பெற்ற கிரிக்கெட் நாடுகளின் முன்னாள் சாம்பியன் வீரர்களை ஒன்றிணைத்து சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) டி20 தொடர் நடத்தப்பட்டுவருகிறது.
இந்தியாவில் நடந்துவரும் இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலீஸ், குமார் சங்ககரா, இயன் மோர்கன், ஷேன் வாட்சன் முதலிய முன்னாள் வீரர்கள் அந்தந்த நாடுகளை கேப்டனாக வழிநடத்துகின்றனர்.
15 லீக் போட்டிகள், 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 18 போட்டிகள் நடத்தப்படும் இந்த தொடரானது பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கியது.
பரபரப்பாக நடந்துவரும் தொடரில் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக களம்கண்டது ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி.
வதோதராவில் தொடங்கப்பட்ட போட்டியில் ஷேன் வாட்சன் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷேன் வாட்சன் மற்றும் கலம் ஃபெர்குசன் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
11 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என துவம்சம் செய்த ஃபெர்குசன் 43 பந்தில் 85 ரன்கள் அடித்து வெளியேறினார். இறுதிவரை களத்தில் நிலைத்து நின்ற ஷேன் வாட்சன் 9 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி 61 பந்தில் 122 ரன்கள் குவித்து மிரட்டினார். இருவரின் அசத்தலான ஆட்டத்தால் 20 ஓவரில் 260/1 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி.
கடந்த லீக் போட்டிகளில் இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக 110 ரன்கள், இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக 107 ரன்கள் என அடித்து அசத்திய ஷேன் வாட்சன் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கில் இன்று 3வது டி20 சதத்தை அடித்து பிரமிக்க வைத்தார்.
261 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஜாக் காலீஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணி விளையாடிவருகிறது.