Shaheen Afridi
Shaheen Afridi icc
கிரிக்கெட்

குறைவான போட்டிகளில் அதிவேக 100 விக்கெட்டுகள்! ஷாஹீன் அஃப்ரிடி அசத்தல் சாதனை!

Rishan Vengai

நடப்பு உலகக்கோப்பையில் அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பை தக்க வைக்கவேண்டுமானால், இனிவரவிருக்கும் 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் அணி சென்றுள்ளது. இந்நிலையில் ஒரு முக்கியமான போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து களம்கண்டது பாகிஸ்தான் அணி.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹீன்!

உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை வைத்திருக்கும் ஒரு அணியாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, காயத்திலிருந்து மீண்டுவந்த ஷாஹீன் அஃப்டிரி, காயத்தால் வெளியேறிய நஷீம் ஷா மற்றும் முதல்முறையாக இந்திய டிராக்கில் பந்துவீசும் ஹாரிஸ் ராஃப் என ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது சொதப்பலான அணுகுமுறையை கொண்டுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் தரமான கம்பேக் கொடுத்த பாகிஸ்தான் பவுலர்கள் மிரட்டிவிட்டனர்.

Shaheen

முதலில் பேட்டிங் செய்த வங்கதேசத்திற்கு எதிராக பந்துவீசிய ஷாஹீன் அப்ரிடி, முதல் ஓவரிலேயே தன்ஷித் ஹாசனை 0 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். அதற்கு பிறகு களமிறங்கிய ஷண்டோவை 4 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றிய அஃப்ரிடி, 6 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை எடுத்துவந்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். ஷாஹீன் ஒருபுறம் அற்புதமான ஸ்பெல்லை வீச, மறுமுனையில் பந்துவீச வந்த ஹாரிஸ் ராஃப் விக்கெட் கீப்பர் முஸ்ஃபிகுர் ரஹிமை 5 ரன்னில் வெளியேற்ற, வங்கதேச அணி 23 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

204-க்கு சுருண்ட வங்கதேசம்!

என்னதான் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த லிட்டன் தாஸ் மற்றும் முஹமதுல்லா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவுண்டரி சிக்சர்களாக விரட்டிய இந்த ஜோடி 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட 100 ரன்களை கடந்து நல்ல நிலைமையில் இருந்தது வங்கதேச அணி. இந்த இரண்டு வீரர்களில் ஒருவர் கடைசிவரை ஆட்டத்தை எடுத்துச்செல்வார்கள் என்று எதிர்ப்பார்த்த போது, லிட்டன் தாஸை 45 ரன்னில் வெளியேற்றினார் இஃப்திகார் அஹமது. பிறகு பந்துவீச வந்த ஷாஹீன் அப்டிரி அரைசதமடித்து நிலைத்து நின்ற முஹமதுல்லாவை போல்டாக்கி வெளியேற்ற, ஆட்டம் கண்டது வங்கதேச அணி.

Shaheen

பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினாலும், 43 ரன்னில் வெளியேற்றிய ஹாரிஸ் ராஃப் பாகிஸ்தான் அணியை முழுமையாக ஆட்டத்திற்குள் எடுத்துவந்தார். அடுத்தடுத்து களத்திற்கு வந்த டெய்ல் எண்டர்களை எல்லாம் போல்ட் எடுத்து வெளியேற்றிக்கொண்டே இருந்த வாசிம், வங்கதேச அணியை 204 ரன்னில் சுருட்டினார். சிறப்பாக பந்துவீசிய ஷாஹீன் அப்ரிடி மற்றும் வாசிம் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஹாரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகளை தூக்கினார்.

அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்தி உலக சாதனை!

இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷாஹீன் அஃப்ரிடி, ஒருநாள் கிரிக்கெட்டில் குறைவான போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய உலக சாதனை படைத்தார். 51 ODI போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் ஷாஹீன் அஃப்ரிடி, குறைவான போட்டிகளில் 100 விக்கெட்டை கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற புதிய மைல்கல் சாதனைய படைத்தார்.

Shaheen Afridi - Mitchell Starc

இதற்கு முன் 52 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்த ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை பின்னுக்கு தள்ளி இந்த சாதனையை ஷாஹீன் அப்ரிடி படைத்துள்ளார். 205 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாடி வருகிறது.