மகளிர் ஆசிய கோப்பை வெற்றியின் ஊக்கத்தில் 2026 ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட்டில் இந்தியா அதிரடி ஆட்டம் காட்டியது. அரையிறுதியில் வங்கதேசத்துக்கு எதிராக ஷபாலி வெர்மா 49 பந்தில் 9 சிக்சர்களுடன் சதமடித்து இந்தியா 195 ரன்கள் சேர்த்தது.
மகளிர் ஆசிய கோப்பை வென்ற கையோடு தற்போது 2026 மகளிர் ஆசிய விளையாட்டு டி20 போட்டியில் இந்திய அணி பங்கேற்றுள்ளது.
இந்தியா உடன் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஜப்பான், சீனா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 8 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் ஆசிய விளையாட்டு போட்டி நாக்அவுட் போட்டிகளாக நடைபெறுகிறது.
8 அணிகள் மோதிய காலிறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் வெற்றிபெற்ற நிலையில், இன்று அரையிறுதிப்போட்டிகள் நடைபெற்றன.
முதல் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றிபெற்றது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஜோடியாக களமிறங்கிய ஷபாலி வெர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா முதல் விக்கெட்டுக்கே 70 ரன்கள் அடித்து அசத்தியது. 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசிய ஸ்மிருதி மந்தனா 19 பந்தில் 37 ரன்கள் அடித்து வெளியேறினார். ஆனால் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 சிக்சர்களை பறக்கவிட்ட ஷபாலி வெர்மா 49 பந்தில் சதமடித்து மிரட்டினார். ஷபாலியின் சதத்தால் 20 ஓவரில் 195 ரன்களை இந்தியா குவித்தது.
196 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய வங்கதேச அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 81 ரன்னுக்கு சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய நந்தனி, தீப்தி சர்மா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்தப்போட்டியில் தன்னுடைய முதல் சர்வதேச டி20 சதத்தை அடித்ததோடு, பெண்களுக்கான டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீராங்கனையாக சாதனை படைத்தார் ஷபாலி. 35 சிக்சர்களை அடித்து அட்சத்தியுள்ளார்.
அதேபோல ஒரு காலண்டர் ஆண்டில் 800 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனையாகவும், அதிவேகமாக டி20 சதமடித்த ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனையையும் முறியடித்து அசத்தினார்.