சேனுரான் முத்துசாமி cricinfo
கிரிக்கெட்

இந்தியாவிற்கு எதிராக சதமடித்த தமிழர் முத்துசாமி.. 489 ரன்கள் குவித்த தென்னாப்ரிக்கா!

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வம்சாவளியான சேனுராஜ் முத்துசாமி முதல் சர்வதேச சதமடித்து அசத்தினார்..

Rishan Vengai

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. தமிழக வம்சாவளியான முத்துசாமி 109 ரன்கள் அடித்து இந்தியாவிற்கு தலைவலியாக மாறினார். இந்தியா சொந்த மண்ணில் தொடரை இழக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது..

இந்தியா - தென்னாப்பிரிக்கா

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்களை அடிக்கமுடியாமல் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி தொடரை வெல்லும் நோக்கில் இரண்டாவது போட்டியில் விளையாடிவருகிறது..

இந்தியாவின் நம்பிக்கையை சிதைத்த முத்துசாமி..

குவஹாத்தியில் தொடங்கி நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது..

மார்க்ரம் 38, ரிக்கல்டன் 35, ஸ்டப்ஸ் 49, பவுமா 41 மற்றும் முல்டர் 13 ரன்கள் என அடித்து வெளீயேற 201 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா அணி.. டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் வெளியேறி விட்டார்கள் இனி தென்னாப்பிரிக்கா 300 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என நினைத்தபோது தான், 7வது வீரராக களமிறங்கிய தமிழக வம்சாவளியான சேனுரான் முத்துசாமி இந்தியாவிற்கு தலைவலியாக மாறினார்..

சேனுரான் முத்துசாமி

ஸ்பின்னர் மற்றும் பேட்டரான முத்துசாமி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.. முத்துசாமி ஆட்டத்தையே இந்தியாவின் கைகளிலிருந்து தென்னாப்பிரிக்கா வசம் கொண்டுசெல்ல, வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவது போல 9வது வீரராக களமிறங்கிய மார்கோ யான்சனும் 93 ரன்கள் அடிக்க தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்துள்ளது..

மார்கோ யான்சன்

முதல் போட்டியில் இந்திய அணி தாங்களாகவே வெற்றியை பறிகொடுத்த நிலையில், சொந்த மண்ணில் மீண்டும் டெஸ்ட் தொடரை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது இந்தியா!