சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய சர்பராஸ் கான், 47 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சர் அடித்து சதமடித்து அசத்தியுள்ளார். இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில், இந்த ஆட்டம் தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது. ஷர்துல் தாக்கூர் 5 விக்கெட்டுகள் எடுத்து அசாம் அணியை சிரமத்தில் ஆழ்த்தினார்.
உள்ளூர் தொடரோ, வெளிநாட்டு தொடரோ ஒவ்வொரு முறை 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படும்போதும் சர்பராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன் என்ற இரண்டு பெயர் அதிகமாக பேசப்படும். முதல்தர கிரிக்கெட்டில் 70 சராசரியுடன் சர்பராஸ் கான், 8000+ ரன்களுடன் அபிமன்யு ஈஸ்வரன் இருவரும் தொடர்ந்து ஜொலித்து வரும்நிலையில் அவர்கள் அணியில் எடுக்கப்படாதபோதெல்லாம் பெரிய விமர்சனங்கள் வைக்கப்படும்..
சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணி சொந்தமண்ணில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 0-2 என தோற்றபோதும், சர்பராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது..
இந்நிலையில் அணியில் இடம்கிடைக்காத விரக்தியில் இருக்கும் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் சதமடித்து தங்களுக்கான வாய்ப்புக் கதவை மீண்டும் தட்டியுள்ளனர்..
2025 சையத் முஷ்டாக் அலி தொடரின் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் அசாம் அணிகள் விளையாடிவருகின்றன.. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கான், 47 பந்தில் 8 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என பறக்கவிட்டு சதமடித்து அசத்தினார்.. அவருடைய அபாரமான ஆட்டத்தால் 20 ஓவரில் 220 ரன்களை குவித்தது மும்பை அணி..
221 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடி வரும் அசாம் அணி, மும்பை கேப்டன் ஷர்துல் தாக்கூரின் பந்துவீச்சை சமாளிக்க முடியால் 81 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது.. சமீபத்தில் மும்பை அணிக்காக ஐபிஎல்லில் வர்த்தகம் செய்யப்பட்டிருக்கும் ஷர்துல் தாக்கூர் இன்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்..
இந்திய அணியில் டி20 வடிவத்தை பொறுத்துதான் வாய்ப்பு கிடைக்குமென்றால் சதமடித்த அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என அஸ்வின் கூறியிருந்த நிலையில், தற்போது ஈஸ்வரனை தொடர்ந்து சர்பராஸ் கானும் 47 பந்தில் சதமடித்து தேர்வுக்குழுவின் கதவை தட்டியுள்ளார்..