மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி, அதற்கு பிறகு 16 ஆண்டுகளாக கோப்பை வெல்லவில்லை. அதுமட்டுமில்லாமல் 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிறகு 11 ஆண்டுகளாக எந்தவிதமான ஐசிசி கோப்பையையும் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் 2014 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி, 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2021 மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என 5 முறை கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது இந்திய அணி. இதில் 2015 மற்றும் 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டிகளும் அடங்கும்.
இந்தசூழலில் 11 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருந்த இந்திய அணிக்கு 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இரண்டையும் கேப்டனாக வென்றுகொடுத்தார் ரோகித் சர்மா. இந்த 2 கோப்பைகளையும் வெறும் 8 மாத இடைவெளியில் இந்திய அணி தட்டிச்சென்றது.
இந்நிலையில் ரோகித் சர்மாவை புகழ்ந்து பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், கோப்பை வெல்லும் வெற்றி ஃபார்முலாவை கண்டறிந்ததற்கு ரோகித்திற்கு நன்றி தெரிவித்தார். 2025 CEAT கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த டி20 பேட்டருக்கான விருதை வென்ற சஞ்சு சாம்சன், “டி20 உலகக்கோப்பையை வெல்லும் வெற்றி ஃபார்முலாவை கண்டறிய இந்திய அணிக்கு 16 ஆண்டுகள் ஆனது, அதற்கு ரோகித் பையாவிற்கு நன்றி” என தெரிவித்தார்.
2025 CEAT கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் சாம்பியன்ஸ் டிராபி வென்றதற்கான சிறப்பு விருது ரோகித் சர்மாவிற்கு வழங்கப்பட்டது.