17வது ஆசிய கோப்பை தொடரானது யுஏஇ-ல் உள்ள துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன், ஹாங்காங் முதலிய 8 அணிகள் இரண்டு குழுக்களாக லீக் போட்டிகளில் விளையாடிய நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் முதலிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
இதில் ஒரு அணி மற்ற 3 அணிகளுடன் தலா ஒருமுறை மோதும் நிலையில், முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
இந்நிலையில் சூப்பர் 4 போட்டிகளுக்கு முன்னதாக இன்று இந்தியா ஓமனுக்கு எதிராக கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 188 ரன்கள் சேர்த்துள்ளது.
ஓமனுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 2 மாற்றங்களுடன் இந்திய அணி களம்கண்டது. வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஹர்சித் ரானா மற்றும் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாட, தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் விரைவாகவே அவுட்டாகி வெளியேறினார். இந்தப்போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு 3வது வீரராக இறங்க வாய்ப்பளிக்கப்பட்டது.
அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 15 பந்தில் 38 ரன்கள் அடித்து வெளியேறினார். மறுமுனையில் நிலைத்து நின்று 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என விளாசிய சஞ்சு சாம்சன் 56 ரன்கள் அடித்தார். அடுத்தடுத்து வந்த அக்சர் பட்டேல் 26, திலக் வர்மா 29 ரன்கள் அடிக்க இந்திய அணி 20 ஓவரில் 188 ரன்கள் சேர்த்தது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இறுதிவரை பேட்டிங் செய்ய வரவில்லை.