சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன் X
கிரிக்கெட்

முடிவுக்கு வந்தது சஞ்சு சாம்சனின் நீண்டநாள் போராட்டம்! முதல் சர்வதேச சதமடித்து அசத்தல்!

Rishan Vengai

சஞ்சு சாம்சனும் இந்திய அணியில் நிரந்தர இடமும் என தனி கிரிக்கெட் கதையே எழுதலாம். 2015ஆம் ஆண்டு தன்னுடைய முதல் டி20 சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன், கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு பிறகு தான் 2021ல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அந்தளவு தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளார் சஞ்சு சாம்சன்.

டி20 போட்டிகளில் இடம் கிடைத்தால், ஒருநாள் போட்டியில் இடமில்லை. ஒடிஐ போட்டிகளில் இடம்கிடைத்தால் டி20 போட்டிகளில் இடமில்லை என சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை என்பது போராட்டமாகவே இருந்துவந்துள்ளது. ஒவ்வொரு முறை இந்திய அணி அறிவிக்கப்படும் போதும் “JusticeForSanjuSamson" என்ற ஹேஷ்டேக் மட்டும் இருக்காமல் இருந்ததில்லை. அந்தளவு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சஞ்சு சாம்சனின் திறமைக்கான வாய்ப்பை வழங்குங்கள் என தொடர்ந்து தங்களுடைய ஆதரவை அளித்துவந்துள்ளனர்.

இந்நிலையில் தான் நீண்டகால போராட்டத்தின் பலனாய் தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்து அசத்தியுள்ளார் சஞ்சு சாம்சன்.

கடினமான நேரத்தில் சதமடித்து அசத்திய சாம்சன்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றிப்பெற்ற நிலையில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரை உறுதிசெய்யும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது தென்னாப்பிரிக்காவின் போலண்ட் பார்க்கில் நடந்துவருகிறது.

Sanju Samson

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. ருதுராஜ் காயத்தால் விலகிய நிலையில், தொடக்க வீரராக ராஜத் பட்டிதார் தன்னுடைய அறிமுக போட்டியில் களமிறங்கினார். தொடக்கம் முதலே அதிரடியான பேட்டிங்கை ஆடிய பட்டிதார் 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு 22 ரன்னில் வெளியேறினார். உடன் சாய்சுதர்சனும் 10 ரன்னில் வெளியேற, 3வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் கைக்கோர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது.

Sanju Samson

ஆனால் 21 ரன்னில் கேஎல் ராகுல் வெளியேற இந்திய அணி ஆட்டம் கண்டது. அப்போது தான் 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சஞ்சு மற்றும் திலக் வர்மா இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சஞ்சு மற்றும் திலக் வர்மா இருவரும் அடுத்தடுத்து அரைசதமடித்து அசத்த, இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தது. தன்னுடைய முதல் அரைசதத்தை பதிவுசெய்த திலக் வர்மா 52 ரன்னில் வெளியேற, தொடர்ந்து அற்புதமான பேட்டிங்கைவ் எளிப்படுத்திய சஞ்சு சாம்சன் தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்து அசத்தினார். 114 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என விளாசிய சஞ்சு சாம்சன் 108 ரன்கள் அடித்தார். இறுதியில் வந்து கலக்கிய ரின்கு சிங் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 38 ரன்கள் அடிக்க 50 ஓவர் முடிவில் 296 ரன்களை சேர்த்தது இந்திய அணி.

தென்னாப்பிரிக்கா அணி தொடரை வெற்றிபெற 297 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கவிருக்கிறது.