Sanju - Sachin - Ganguly
Sanju - Sachin - Ganguly Web
கிரிக்கெட்

2 போட்டி மட்டுமே விளையாடி சதம்! சச்சின், கங்குலி சாதனையை முறியடித்த சஞ்சு... அட்டகாசமான 3 சாதனைகள்!

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 1-1 என தொடரை சமன்செய்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றிப்பெற்று தொடரை சமன்நிலையில் வைத்திருந்தன.

IND vs SA

இந்நிலையில் தொடரை வெல்லக்கூடிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது தென்னாப்பிரிக்காவின் போலண்ட் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அபாரமான சதத்தால் 296 ரன்களை போர்டில் போட்டது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 218 ரன்களில் ஆல்அவுட்டாகி 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தன்னுடைய முதல் சர்வதேச சதமடித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்து வந்த சஞ்சு சாம்சன் தன்னுடைய சதத்தின் மூலம் அவை அனைத்துக்கும் பதிலளித்துள்ளார். இந்நிலையில் தென்னாப்பிரிக்கா மண்ணில் சதமடித்திருக்கும் சஞ்சு சாம்சன் நேற்றைய ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

சச்சின், கங்குலி சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!

தென்னாப்பிரிக்கா மண்ணில் வைத்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில், விராட் கோலி, சச்சின், கங்குலி முதலிய 7 வீரர்களுக்கு பிறகு 8வது இந்திய வீரராக இணைந்துள்ளார் சஞ்சு சாம்சன். இந்தப்பட்டியலில் விராட் கோலியை (3 சதங்கள்) தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் தலா ஒரு சதத்தை மட்டுமே அடித்திருக்கின்றனர்.

Ganguly

அந்தப்பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (22 இன்னிங்ஸ்கள்), சவுரவ் கங்குலி (9 இன்னிங்ஸ்கள்), ரோகித் சர்மா (13 இன்னிங்ஸ்கள்), ஷிகர் தவன் (11), விவிஎஸ் லக்சுமன் (5 இன்னிங்ஸ்கள்) என அனைத்து ஜாம்பவான் இந்திய வீரர்களும் அதிகப்படியான இன்னிங்ஸ்களில் மட்டுமே தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒரு சதத்தை அடித்துள்ளனர். இந்த தொடரில் விளையாடிய சஞ்சு சாம்சன் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி ஒரு சதத்தை அடித்து அசத்தியுள்ளார். அதிலும் அவருடைய இந்த சதம் அணி கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது வெளிவந்துள்ளது.

அரிதான சாதனையில் கோலியுடன் இணைந்த சஞ்சு சாம்சன்!

தென்னாப்பிரிக்கா மண்ணில் 3ஆம் நிலை வீரராக களமிறங்கி சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியுடன் இணைந்துள்ளார் சஞ்சு சாம்சன்.

இரண்டாவது போட்டியில் 5ஆம் நிலை வீரராக களமிறங்கிய சஞ்சுவை, 3வது போட்டியில் டாப் ஆர்டரில் களமிறக்கினார் கேப்டன் கேஎல் ராகுல். கேப்டனின் சரியான நகர்த்தலை பிடித்துக்கொண்ட சஞ்சு சாம்சன் 3ஆம் நிலை வீரராக, விளையாடிய முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் சர்வதேச சதமடித்த முதல் கேரள வீரர்!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்த சஞ்சு சாம்சன், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச ஒருநாள் சதமடித்த முதல் கேரள வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Sanju Samson

14 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் சஞ்சு சாம்சன், 3 அரைசதங்கள், 1 சதம் உட்பட 56.67 சராசரியுடன் 510 ரன்கள் அடித்துள்ளார். மிடில் ஆர்டரில் களமிறங்கி 3 அரைசதங்களை அடித்திருந்த அவர், டாப் ஆர்டரில் விளையாடிய முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார்.