SKY - Samson - Ishan
SKY - Samson - Ishan Twitter
கிரிக்கெட்

சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்பு; ஸ்ரேயாஸ், இஷான், சூர்யா உடன் ஓர் ஒப்பீடு!

Angeshwar G

2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி எப்படி உலகக்கோப்பைக்கான அணியை கட்டமைக்கப்போகிறது, எந்த வீரர்கள் எந்த ரோலில் செயல்பட போகிறார்கள் என்ற கேள்விகள் ஒவ்வொரு இந்திய ரசிகருக்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. ஏனென்றால் 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்றதற்கு பிறகு 10 ஆண்டுகளாக எந்தவிதமான ஐசிசி கோப்பையையும் வெல்லமுடியாமல் இந்திய அணி தடுமாறி வருகிறது.

Indian Team

2013-க்கு பிறகு 2014, 2015, 2016, 2017, 2019, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என பலமுறை ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டிகள், அரையிறுதிப்போட்டிகள் வரை இந்திய அணி முன்னேறினாலும் அணியில் இருக்கும் சிறிய குறைகள் எல்லாம் பெரிதாக மாறி கோப்பையை நழுவவிட்டு ஏமாற்றத்தையே தந்து வருகிறது இந்திய அணி.

தொடரும் தேர்வு சர்ச்சை!

இந்நிலையில் அத்தனை தவறுகளையும் சரிசெய்துகொண்டு சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பை தொடரை பயன்படுத்தி இந்த முறையாவது இந்திய அணி கோப்பையை வெல்லவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு, அனைத்து இந்திய ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது. அதற்கான அடித்தளத்தை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரிலிருந்தே தொடங்கும் என நம்பப்படுகிறது.

Rohit Sharma-Ashwin

எனினும் கடந்த சில ஆண்டுகளாகவே வீரர்கள் தேர்வில் இந்திய அணி சொதப்பி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. சர்ஃபராஸ் கானை டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யாதது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக செயல்படும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் இருப்பது என ஏகப்பட்ட புகார்களை நாள் தோறும் இந்திய கிரிக்கெட் தேர்வு வாரியம் சந்தித்து வருகிறது. ஆண்கள் கிரிக்கெட் மட்டுமன்று மகளிர் கிரிக்கெட்டிலும் இதே நிலைமை நீடிக்கிறது.

சஞ்சு சாம்சனுக்கு மறுக்கப்படும் வாய்ப்பு

இந்திய மண்ணில் உலகக் கோப்பை நடக்க இருக்கும் சூழலில் மேற்கிந்திய தீவுகளுடனான தொடருக்கு இளம் வீரர்கள் பலரையும் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்ற ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடி தனது பெயரை நிலை நிறுத்தினார்.

Sanju Samson

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஒரு நாள் தொடரில் இடம் பெற்றிருந்தாலும் முதல் ஒருநாள் போட்டியில் களமிறக்கப்படவில்லை. இதன்காரணமாக மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக இணையத்தில் தங்களது கருத்துகளை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். ஏனெனில் டி20 போட்டிகளில் அசத்தும் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டியில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்யவில்லை. 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 452 ரன்களை எடுத்துள்ளார். அவரது சராசரி 23.78 ஆக உள்ளது. அதில் 2 அரைசதங்களும் அடக்கம்.

சாம்சன் vs ஸ்ரேயாஸ்

ஆனாலும், சஞ்சு சாம்சனுக்கு போட்டியாக இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் என இரு வீரர்கள் கருதப்படுகின்றனர். இஷான் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்து தனது திறமையை நிரூபித்தவர். ரிஷப் பந்த்திற்கு ஏற்பட்ட விபத்து மற்றும் கே.எல்.ராகுலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இஷான் தொடர்ச்சியாக வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

Jasprit Bumrah - Shreyas Iyer

அதே சமயம் நம்பர் 4 இடத்தில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர்க்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் நம்பர் 4 இடத்திலும் அவ்வப்போது இஷான் விளையாடி வருகிறார். இஷான், ஸ்ரேயாஸ் இருவருக்கும் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் சாம்சனுக்கு கொடுக்கப்படவில்லை என்ற புகார்கள் தொடர்ச்சியாக உள்ளது. இடையில் சூர்யகுமார் யாதவ் வேறு தனது விஸ்வரூப ஆட்டத்தை ஆடியதும் சாம்சனுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சஞ்சு சாம்சன் 11 ஒருநாள் போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தம் 330 ரன்களை எடுத்துள்ளார். அதேவேளையில் 23 போட்டிகளில் 21 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஸ்ரேயாஸ் 433 ரன்களை எடுத்துள்ளார். இருவீரர்களுக்கும் இடையேயான சராசரியை ஒப்பிடுகையில், அதாவது ஒருநாள் போட்டிகளில் நம்பர் 4 இடத்தில் விளையாடியதில் சாம்சன் 66 சராசரியும் ஸ்ரேயாஸ் 24.05 சராசரியையும் வைத்துள்ளார்.

Sanju Samson

ஸ்ட்ரைக் ரேட்டை ஒப்பிடுகையில் சஞ்சுசாம்சன் 104.06 ம் ஸ்ரேயாஸ் 102.12யையும் வைத்துள்ளனர். நான்காம் இடத்தில் விளையாடி சாம்சன் 86 ரன்களை அதிகபட்சமாகவும் ஸ்ரேயாஸ் 64 ரன்களை அதிகபட்சமாகவும் அடித்துள்ளனர். இரு வீரர்களும் நான்காவது இடத்தில் களமிறங்கி சதம் அடிக்காத நிலையில் இருவரும் தலா 2 அரைசதங்களை அடித்துள்ளனர்.

ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது காயங்களில் இருந்து மீண்டு வருகிறார். ஆனாலும் அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு சாம்சனுக்கு வழங்கப்படவில்லை என்றே ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சஞ்சுசாம்சன் vs இஷான் கிஷன்

சஞ்சு சாம்சனுடன் இஷான் கிஷானை ஒப்பிடுகையில் அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் தேவை என்பதால் இஷான் கிஷன் சஞ்சு சாம்சனை விட முன்னணியில் உள்ளார். மேலும் இஷான் ரிசர்வ் பேக்அப் ஓப்பனராகவும் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இஷான் பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிற்கும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். கடந்த டிசம்பரில் வங்கதேசம் உடனான போட்டியில் இரட்டை சதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் ஓப்பனரான இஷான் மிடில் ஆர்டரில் விளையாட பழக்கப்படுத்தப்படுகிறார் என்றும் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படும் சாம்சனுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

Suryakumar yadav

எது எப்படி இருந்தாலும் மற்ற வீரர்களுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான வாய்ப்பு சாம்சனுக்கும் வழங்க வேண்டும் என்பதே பலரது நிலைப்பாடும். அண்மையில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஜெர்ஸியை அணிந்து கொண்டு களத்திற்கு சென்றார். அவர் மாற்று வீரர்களின் ஜெர்ஸியை அணிந்து கொண்டு செல்வது இது முதன்முறை அல்ல. கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஜெர்ஸியை அணிந்து பேட் செய்ய வந்தார். மீண்டும் சாம்சன் ஜெர்ஸியை அணிந்து கொண்டு விளையாட வந்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் இது குறித்து கூறுகையில், “சஞ்சு சாம்சன் இந்திய அணியில் ஆடும் 11ல் இடம் பெறுவதற்கு இது தா ஒரே வழி போல” என கிண்டலாகவும் இந்திய அணியின் தேர்வையும் விமர்சித்து பதிவிட்டுள்ளார். இது தற்போது வேகமாக பகிரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.