இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. லீட்ஸில் நடைபெற்ற முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தபோதும் இந்திய அணி தோல்வியை தழுவியது.
முதல் டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் மகிழ்ச்சியுடன் இருக்கும் இங்கிலாந்து அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு மாற்றம் செய்யாமல் அதேஅணியை அறிவித்தது.
இந்நிலையில் இன்று பர்மிங்காமில் தொடங்கியிருக்கும் இரண்டாவது போட்டியில், யார் எதிர்ப்பாராத விதமாக 3 அதிரடியான மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது இந்திய அணி.
பரபரப்பாக தொடங்கியிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு அழைத்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றால் தான் தொடரை 1-1 என சமநிலையில் வைத்திருக்க முடியும் என்ற நிலையில், வலுவான பிளேயிங் 11 வீரர்கள் கொண்ட அணியை இந்தியா அறிவிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் முதல் போட்டியிலிருந்து பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாக்கூர் 3 வீரர்கள் நீக்கப்பட்டு, பும்ராவிற்கு பதில் ஆகாஷ் தீப், சாய் சுதர்சனுக்கு பதில் மற்றொரு சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான வாசிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி முதலிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி, இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய முதல் போட்டியில் இன்று களம்கண்டுள்ளார்.