இந்திய ஒருநாள் அணியில் ஜடேஜா இடம்பெறாதது குறித்து அஜித் அகர்கர் சொன்ன வார்த்தைகளை குறிப்பிட்டு சாடியுள்ளார் முன்னாள் இந்திய தொடக்க வீரர்.
அக்டோபர் 19-ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இதற்கான இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் ஒருநாள் அணியில் ரவீந்திர ஜடேஜா இடம்பெறவில்லை. அதற்கு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சொன்ன பதில்தான் முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷை அதிருப்தி அடையச்செய்துள்ளது.
இந்திய ஒருநாள் அணியில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷ், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 2027 உலகக்கோப்பை விளையாடுவார்களா? என்ற குழப்பத்தை வெளிப்படுத்தினார்.
தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அவர், விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற திறமையான வீரர்கள் வருவார்கள், ஆனால் அவர்கள் அழுத்தமான நேரத்தில், மன உறுதியுடன் விளையாடி அவர்களை போல அபார திறமையான வீரர்களாக மாறுவார்களா என்பதுதான் கேள்வி. அதிலும் அணிக்காக சுயநலமற்ற பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மாவின் அர்ப்பணிப்பை எந்த இந்திய வீரரால் நிரப்ப முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் நன்றாக விளையாடினால் அவர்களுக்கு அணியில் இடம் என்று நேரடியாக சொன்னதுபோல் உள்ளது என வெளிப்படுத்தினார்.
ஜடேஜா அணியில் இல்லாதது குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்திய ரமேஷ், ஜடேஜாவை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று புகழாரம் சூட்டினார். அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை என்ற கேள்விக்கு எக்ஸ்ட்ரா பவுலர்கள் தேவையில்லை என்ற தொனியில் பேசிய அஜித் அகர்கரை சாடிய சடகோபன் ரமேஷ், ஜடேஜாவை லெஜண்ட் என்று புகழ்ந்தார்.
மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிவிட்டார் என்பதற்காக சுப்மன் கில்லை கேப்டனாக மாற்றிய நீங்கள், அதே தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜாவை அணியில் கூட எடுக்கவில்லை என்றால் என்ன சொல்வது என்று தெரியவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.