இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி நாளை லீட்ஸின் ஹெடிங்லியில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா-இங்கிலாந்து பங்கேற்கப்போகிறது என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தநிலையில், ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு இந்தியாவை சரிசமமான போட்டியாளராக இல்லாமல் சற்று கீழிறக்கியுள்ளது.
இந்த சூழலில் இங்கிலாந்தை 18 ஆண்டுகளுக்கு பிறகு சுப்மன் கில் தலைமையிலான இந்தியா வீழ்த்தும் என்று சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிறிக்இன்ஃபோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்தியாவின் இளம் டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில்லுக்கு சச்சின் டெண்டுல்கர் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
கேப்டனாக இதை செய்யுங்கள் என்று கூறியிருக்கும் சச்சின், கேப்டனாக சுப்மன் கில் துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும், அணியின் நலனுக்காக முடிவு எடுக்கும்போது வெளி உலகத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்பதே அவருக்கு நான் வழங்கும் அறிவுரை.
ஏனென்றால், ’அவர் அதிகமாக அட்டாக்கிங் கேப்டன்சி செய்கிறார், மிகவும் டிஃபன்சிவ் கேப்டன்சி செய்கிறார், அவர் அதை செய்யவில்லை, இதை செய்யவில்லை’ என்று மக்கள் பல கருத்துக்களை கொண்டிருப்பார்கள். வெளிப்புற சத்தங்களை விடுத்து அணிக்கு என்ன தேவையோ அந்த முடிவுகளை தைரியமாக எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் சுப்மன் கில் கேப்டனாக புதியதை செய்யப்போகிறார் என்று நம்பிக்கை தெரிவித்த சச்சின், இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.