குஷி முகர்ஜி, சூர்யகுமார் எக்ஸ் தளம்
கிரிக்கெட்

SKYவை வம்புக்கு இழுத்த பிரபல நடிகை.. ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு பதிவு!

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து தவறான தகவல்களை தெரிவித்ததாக நடிகை குஷி முகர்ஜி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Prakash J

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து தவறான தகவல்களை தெரிவித்ததாக நடிகை குஷி முகர்ஜி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

'அஞ்சல் துறை' என்ற தமிழ்ப் படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு அறிமுகமான குஷி முகர்ஜி, அதன்பின்னர் தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்தார். 'ஹார்ட் அட்டாக்' (2014) மற்றும் 'டோங்கா பிரேமா' (2016) போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார். மறுபுறம், அவர் 2013இல் 'ஷ்ரிங்கார்' என்ற இந்தி படத்தில் நடித்தார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “நான் எந்த கிரிக்கெட் வீரருடனும் டேட்டிங் செய்ய விரும்பவில்லை. எனக்கு பல கிரிக்கெட் வீரர்கள் மெஜேஜ் அனுப்புவர்.

குஷி முகர்ஷி, சூர்யகுமார்

சூர்யகுமார் யாதவ் எனக்கு நிறைய மெஜேஜ் அனுப்புவார். ஆனால் இப்போது நாங்கள் அதிகம் பேசுவதில்லை, நான் யாருடனும் தொடர்பில் இருக்க விரும்பவில்லை" எனத் தெரிவித்திருந்தார். அவருடைய இந்தக் கருத்து இணையத்தில் பெரும் எதிர்வினைகளைப் பெற்றது. நெட்டிசன்கள் அவரது நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். இவ்விவகாரம் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில் என்.டி.டிவி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ”நான் அப்படிச் சொல்லவில்லை. எங்களுக்குள் காதல் எல்லாம் இல்லை. நண்பர்களாகத்தான் பேசினோம். என் பேச்சைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள்” என குஷி முகர்ஷி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை குஷி முகர்ஜியின் இந்தப் பேச்சு சூர்யகுமார் யாதவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, மும்பையைச் சேர்ந்த சமூக வலைத்தள பிரபலமான ஃபைசான் அன்சாரி என்பவர் போர்க்கொடி தூக்கியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிபூர் காவல் நிலையத்தில் குஷி முகர்ஜி மீது புகார் அளித்துள்ள அன்சாரி, அவர் மீது ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”குஷி முகர்ஜி மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். இதை எனது எழுத்துப்பூர்வ புகாரிலும் குறிப்பிட்டுள்ளேன். மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இந்தப் பிரச்னையை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்துச் செல்வது எனது பொறுப்பு. நான் யாருக்கும் பயப்படவில்லை. எனக்கு நீதி மட்டுமே வேண்டும். எத்தனை சிரமங்கள் வந்தாலும் குஷி முகர்ஜி மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று நான் கோருகிறேன். எனக்கு நீதி கிடைக்கும்வரை, நான் காஜிப்பூர் நகரத்திலேயே இருப்பேன். ஒவ்வொரு குடிமகனும் சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக முன்வர வேண்டும். இது அவரது நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் சதி, இது நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார். ஏற்கேனவே நடிகை பூனம் பாண்டே மீதும் இதேபோல 100 கோடி ரூபாய் வழக்கு தொடர்ந்தவர் இந்த ஃபைசான் அன்சாரி என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக 2016ஆம் ஆண்டு தேவிஷா ஷெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்ட சூர்யகுமார் யாதவ், இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்த குஷி முகர்ஜி, அந்நகரத்தில் தனது துணிச்சலான தோற்றங்களுக்காக இணையத்தில் வைரலாகி வருகிறார். ஊடகங்களில் அவர் வெளியிடும் கருத்துகளுக்காகவும் அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.