ரோகித் - சர்ஃபராஸ்
ரோகித் - சர்ஃபராஸ் web
கிரிக்கெட்

“மனசுல என்ன ஹீரோ-னு நினைப்பா?” - சர்ஃபராஸ் கானை எச்சரித்த ரோகித் சர்மா! என்ன நடந்தது?

Rishan Vengai

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி கடைசி இன்னிங்ஸை எட்டியுள்ளது. முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலை பெற்ற போதும் கூட இங்கிலாந்து அணியால் இந்தியாவிற்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வினின் அபாரமான பந்துவீச்சால் 192 ரன்களை மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.

பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் என மூன்றிலும் கலக்கிய இந்திய அணி இங்கிலாந்தை விட போட்டியில் வெற்றிபெறும் இடத்தில் இருக்கிறது. 192 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 3வது நாள் முடிவில் 40 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி உள்ளது.

ashwin

இந்நிலையில் போட்டியின் போது இளம் வீரர் சர்ஃபராஸ் கானை இந்திய கேப்டன் ரோகித் சர்மா எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘ஹீரோவாக இருக்க முயற்சிக்காதே..’ சர்ஃபராஸை எச்சரித்த ரோகித் சர்மா!

இங்கிலாந்து அணி அப்போது இரண்டாவது இன்னிங்ஸில் 142/8 என்ற நிலையில் பேட்டின் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது 49வது வீசிய குல்தீப் யாதவ் ஃபோக்ஸுக்கு எதிராக ஒரு ரன்னை விட்டுக்கொடுத்த பிறகு டெய்ல் எண்டர் ஷோயப் பஷீர் ஸ்டிரைக்கிற்கு வந்தார். அப்போது 5வது பந்தை வீசுவதற்கு முன்பாக இந்திய கேப்டன் ரோகித் ஷோயப் பஷீருக்கு நெருக்கமாக ஃபீல்ட் செட்டிங்கை மாற்றினார்.

பஷீருக்கு அருகில் ஷார்ட் லெக் பீல்டிங்கில் நிற்க சர்ஃபராஸ் வந்த போது அவர் ஹெல்மெட்டை அணியாமல், குல்தீப் யாதவ்விடம் பந்துவீசுமாறு கேட்டுக்கொண்டார். அதனை பார்த்த ரோகித் சர்மா அவரை, “பொறு ஹெல்மெட் வந்துவிடும்” என தடுத்தார். ஆனால் “பரவாயில்லை இரண்டு பந்துகள்தானே” என்று ரோகித்தை சர்ஃபராஸ் சமாதனம் செய்யமுயன்றார். அப்போது கத்திக்கொண்டே சர்ஃபராஸ் கான் அருகில் வந்த ரோகித், “ஹீரோவாக இருக்க முயற்சிக்காதே, முதலில் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு ஃபீல்டிங் செய்” என்று அக்கரையோடு அவருடைய பாணியில் எச்சரிக்கை செய்தார்.

அப்போது கமெண்டரியில் இருந்த தினேஷ் கார்த்திக், “ரோகித் சர்மா சர்ஃபராஸை ஹீரோவாக பார்க்கவிரும்பவில்லை, அம்பயரும் சர்ஃபராஸ் கானிடம் பொறுமையாக இருங்கள் ஹெல்மெட் வந்துவிடும் என கூறுகிறார்” என்று தெளிவுபடுத்தினார். பின்னர் ஹெல்மெட் வந்தபிறகு சர்ஃபராஸ் கான் ஃபீல்டிங் செய்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் டக்கெட் மற்றும் டாம் ஹார்ட்லிக்கு எதிராக இரண்டு அற்புதமான கேட்ச்களை பிடித்திருந்தார் சர்ஃபராஸ் கான்.