ஏபிடி வில்லியர்ஸ் - ரோகித் சர்மா web
கிரிக்கெட்

‘ரோகித் போன்ற வீரரை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கமுடியாது..’ இந்திய தேர்வுக்குழுவுக்கு ஏபிடி அட்வைஸ்!

ரோகித் சர்மா போன்ற ஒரு வீரரை உங்களால் எளிதாக சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிட முடியாது என்று முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

Rishan Vengai

ரோகித் சர்மாவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற வதந்திகளுக்கு மத்தியில், முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ், அவரை போன்ற வீரரை சூப்பர் மார்க்கெட்டில் வாங்க முடியாது என்று இந்திய தேர்வுக்குழுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரிய தொடர்கள், உலகக்கோப்பை போன்ற அழுத்தமான தருணங்களில் ரோகித் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்கள் வரிசையில் தோனிக்கு பிறகு, 2 ஐசிசி கோப்பைகள் வென்ற கேப்டனாக இருக்கிறார் ரோகித் சர்மா. டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி வென்ற அவரால், இதுவரை அவருடைய கனவான ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை. இதான்ல் 39 வயதாகும் அவர் 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் இடம்பெற்று இந்திய அணிக்காக ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்துவருகிறார்.

ரோகித் சர்மா

இந்தசூழலில் தான் டி20 மற்றும் டெஸ்ட் இரண்டு வடிவங்களிலும் ஓய்வுபெற்றுள்ள ரோகித் சர்மா, ஒருநாள் வடிவத்தில் மட்டுமே விளையாடிவருகிறார். சமீபத்தில் நடந்துமுடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவரால் முதலிரண்டு போட்டிகளில் பெரிய ரன்களை குவிக்க முடியவில்லை. இதனால் 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கு இடமில்லை, விரைவில் அவர் ஓய்வை அறிவிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.

ரோகித் சர்மாவை வெளியேற்றுவதில் தேர்வுக்குழு மற்றும் கம்பீர் இரண்டு தரப்பும் உறுதியாக இருப்பதாகவும், அவருக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெறுவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் பிசிசிஐ செயலாளர் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 138 ரன்கள் குவித்த ஹிட்மேன் ரோகித் சர்மா விமர்சனங்களுக்கு தன்னுடைய பேட்டால் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் ரோகித் சர்மா போன்ற ஒரு வீரர் அழுத்தம் அதிகமான ஒருநாள் தொடர்களில் இந்திய அணியில் நிச்சயம் இருக்க வேண்டும் என்றும், அவரை போன்ற ஒரு வீரரை சூப்பர் மார்க்கெட்டில் எளிதில் பிடித்துவிடலாம் என நினைத்துவிடக்கூடாது என்றும் முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ் பேசியுள்ளார்.

தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ஏபிடி வில்லியர்ஸ், “ரோகித் சர்மா நீண்ட காலத்திற்கு மிகவும் நிலையான ஆட்டக்காரராக இருந்ததில்லை; அவரது ஆட்டம் கன்ஸிஸ்ட்டண்டாக இல்லாமல் சற்று ஏற்ற இறக்கத்துடனே இருந்துள்ளது. ஆனால், பெரிய போட்டிகள் என வரும்போது, ​​முக்கியமான தருணங்களில், ரோகித் சர்மா உங்கள் அணியில் இருக்க வேண்டும். அழுத்தமான நேரங்களில் ரோகித் சர்மாவின் அனுபவம் உங்களுக்கு கட்டாயம் தேவை. அதை நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிவிட முடியாது. ஒருநாள் உலகக் கோப்பைகள் மற்றும் பெரிய தொடர்களைப் பொறுத்தவரை முற்றிலும் வேறுபட்ட ஒரு அழுத்தம் இருக்கிறது. அதனால்தான் ரோகித் இந்திய அணியில் ஒரு மிக மிக முக்கியப் பங்கை வகிப்பார் என்று நான் உணர்கிறேன்” என பேசியுள்ளார்.